பாலியல் பலாத்காரம் செய்தால் “கட் பண்ணுவது” தான் தண்டனையா ? “குற்றம் புரிந்தால்” திரைப்படத்தின் விமர்சனம்
அமராவதி ஃபிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம் தயாரிப்பில், எம்.எஸ். பாஸ்கர், ஆதிக் பாபு, அர்ச்சனா, “நாடோடிகள்” அபிநயா ஆகியோர் நடிப்பில், டிஸ்னி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குற்றம் புரிந்தால்”.
கதைப்படி… ஜீவா ( ஆதிக் பாபு ) கம்யூனிச கொள்கையிடன் தனது மாமாவின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார். அவரது மாமாவின் மகள் அர்ச்சனாவும் ஜீவாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். மகளின் கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதாக எம்.எஸ். பாஸ்கர் கூறுகிறார். அன்பாகவும் களகளப்பாகவும் நாட்கள் நகர்கிறது.
இந்நிலையில் திடீரென மூன்றுபேர் வீட்டிற்குள் வந்து ஜீவா மீது தாக்குதல் நடத்தி கை, கால்களை கட்டிப் போட்டதோடு, அவரது மாமாவையும் தாக்கிவிட்டு அர்ச்சனாவை மூன்று பேரும் பலாத்காரம் செய்கின்றனர். ஜீவா கண்விழித்து பார்க்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் தனது மாமாவும், காதலியும் எங்கே என கேட்கும்போது அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் இறந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ஜீவா காவல் நிலையம் செல்கிறார். அங்கு ஆய்வாளர் ஒரு இளைஞரை ஜீவா முன் நிறுத்தி இவன்தான் உன் வீட்டுக்கு வந்தவன், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான் என கூறுகிறார். அவன்மீது தாக்குதல் நடத்தி இவன் இல்லை. அந்த மூன்று பேரும் எனக்கு அடையாளம் தெரியும் என கத்துகிறான். இவன்தான் குற்றம் செய்ததாக மருத்துவ அறிக்கை ஆதாரங்களுடன் கூறுகிறது. நீயும் ஒத்துக்கோ இல்லாவிட்டால் உனக்குத்தான் ஆபத்து என ஆய்வாளர் மிரட்டுகிறார்.
பின்னர் மருத்துவமனை சென்று உண்மையான மருத்துவ அறிக்கை கேட்டு சன்டை போடுகிறார். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் அடித்து துரத்துகிறார். அதன்பிறகு ஐந்து வருடங்களுக்குப் பிறகு காவல் ஆய்வாளர், மருத்துவர் என இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என கூலிப்படையினரை சந்திக்கிறார் ஜீவா. அந்த முயற்சியும் பலனளிக்காததால், விரக்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி வருகிறார்.
தனது கண்முன்னே வருங்கால மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதோடு, மாமா மீதும் தாக்குதல் நடத்தி கொலை செய்த மூன்றுபேரை பலி வாங்கினாரா ஜீவா ? குற்றம் புரிந்த அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா என்பது மீதிக்கதை….
நாயகனாக நடித்திருக்கும் ஆதிக் பாபு தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இந்தப் படம் முதல் படமாக அமைந்திருந்தாலும், பல படங்களில் நடித்த அனுபவசாலி போல் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, காதல், கோபம், சென்டிமென்ட் காட்சிகளில் அதற்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குற்றம் புரிந்தால் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை த்ரில்லர், க்ரைம் ஸ்டோரியாக வித்தியாசமான கோணத்தில் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
ஜீவாவின் காதலியாக அர்ச்சனா நன்றாக நடித்திருக்கிறார். அவரது இளமை ததும்பும் ரொமான்ஸ், குறும்புத்தனம், காதலை வெளிப்படுத்தும் விதம் என அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது. காவல் ஆய்வாளராக மிடுக்கான தோற்றத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அபிநயா.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர். நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.