“ராபர்” விமர்சனம்

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கவிதா எஸ் தயாரிப்பில், சத்யா, டேனி போப், ஜெயபிரகாஷ், தீபா, சென்ட்ராயன், ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ். எம். பாண்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ராபர்”.
கதைப்படி.. பட்டப்படிப்பு முடித்து விட்டு கிராமத்தில் இருக்கும் நாயகன் சத்யா, வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அவர் நினைத்தது போலவே ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஐ.டி கம்பனியில் ஒரு பெண்ணை தன் வழிக்கு கொண்டு வருவதற்காக முயல்கிறார் சத்யா. ஆனால் பணம் இருந்தால் மட்டுமே அந்த பெண்ணை அடையமுடியும் என தெரியவர, ஆள் இல்லாத இடங்களில் தனியாக வரும் பெண்களிடம், முகத்தை மூடிக்கொண்டு ஜெயின் பறிப்பில் ஈடுபட்டு, நினைத்ததை சாதித்துக் கொள்கிறார் சத்யா.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, ராபரி வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். திருட்டு நகையை வாங்கும் கடைக்காரர் இறந்துபோக, டேனி என்பவரிடம் தொழிலை தொடர்கிறார். டேனியும் பகலில் ஐடி நிறுவனத்தில் வேலை. இரவில் ராபரி பிஸ்னஸ் செய்து வருகிறார். சத்யாவின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக, டேனி சத்யாவின் உதவிக்காக என ஒருவனை சேர்த்துவிடுகிறான். இருவரும் நிறைய இடங்களில் ஜெயின் பறிப்பில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்கூட்டரில் தனியாக வந்த பெண்ணிடம் ஜெயின் பறிப்பில் ஈடுபட்டபோது, அந்தப் பெண் இவர்களை விரட்டி வருகிறார். அப்போது ஏற்படும் விபத்தில் அந்தப் பெண் இறக்க நேரிடுகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, போலீஸார் தனிப்படை அமைத்து வெளிமாநிலங்களுக்கு விரைகின்றனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் தந்தை ஜெயபிரகாஷ் தன் மகளுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி, குற்றவாளியை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார்.

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, சென்னை காவல்துறை கண்டுபிடித்தார்களா ? மகளின் மரணத்துக்கு காரணமான குற்றவாளியை பழிவாங்கினாரா தந்தை ? சத்யாவின் வாழ்க்கை என்னானது என்பது மீதிக்கதை…
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஜெயின் பறிப்பு, நகை திருட்டு சம்பவங்களும் நடைபெறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் காவல் துறையோ வெளிமாநில கொள்ளையர்கள், அப்படி, இப்படி என ஏதேதோ கணக்கு காட்டி வழக்குகளை முடித்து விடுகின்றனர். குற்ற சம்பவங்களை நிகழ்த்தி விளையாட்டு மக்களோடு கலந்து தப்பித்துவிடும் குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இதை தைரியமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அற்புதமான திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் பாண்டி.
பெரும்பாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.