விமர்சனம்

பரோலில் வந்து ஆதாரங்கள் சிக்காமல் கொலைகள் செய்த ஆயுள் தண்டனை கைதி ! “சைரன்” திரைவிமர்சனம்

ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், யோகிபாபு, அஜய், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சைரன்”.

கதைப்படி… காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திலக வர்மன் ( ஜெயம் ரவி ) சென்னை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 14 வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையைப் பார்ப்பதற்காக பரோலில் வீட்டிற்கு வருகிறார். அங்கு அவரது மகள் தந்தையைப் பார்க்க மறுக்கிறார். அப்பா சிறைவாசி என்றால் மகளுக்கு கோபம் இருக்கத்தானே செய்யும் என்கிற மகளின் நியாயமான கோபத்தை உணர்ந்த திலகவர்மன் மகளின் விருப்பப்படி இருக்கட்டும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்கிறார். பரோலில் வந்தாலும் போலீசின் நிழலிலேயே இருக்கிறார். தனது பெயரில் இருக்கும் இடத்தை விற்பனை செய்து மகளுக்கு தனது கடமையை செய்ய நினைத்து, அந்த இடத்தை விற்பதற்காக முயற்சி செய்கிறார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியின் தலைவர் மாணிக்கம் ( அழகம் பெருமாள் ), அதே கட்சியைச் சார்ந்த அஜய் இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் விசாரணைக் கைதி ஒருவர் இறந்த வழக்கில், காவல் ஆய்வாளர் நந்தினி ( கீர்த்தி சுரேஷ் ) மீது பழி சுமத்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய நந்தினி இந்த வழக்கை விசாரணை மேற்கொள்கிறார். இதற்கு உயர் அதிகாரி சமுத்திரக்கனி தடைவிதித்தது, கால அவகாசம் கொடுத்து மீண்டும் அவரையே விசாரணை செய்ய அனுமதிக்கிறார்.

ஆய்வாளர் நந்தினிக்கு பரோலில் வந்துள்ள திலகன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதன்பிறகு அவர்தான் கொலை செய்திருப்பார் எனவும் நம்புகிறார். பின்னர் அதற்கான பின்னனிகளை ஆய்வு செய்யத் தொடங்குகிறார். எந்நேரமும் போலீஸ் காவலிலேயே இருக்கும் திலகன் கொலை செய்தாரா ? உன்மையான கொலையாளி யார் ? திலகன் தனது மகளுடன் பேசினாரா ? திலகன் ஏன் சிறை தண்டனை அனுபவிக்கிறார் ? என்பது மீதிக்கதை…

படத்தில் மர்மமான கொலைகளையும், தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தையும் தனது திரைக்கதையின் மூலம் விருவிருப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். படம் பார்ப்பவர்கள் காட்சிகளை யூகிக்க முடியாதவாறு கதை நகர்கிறது.

காவல்துறையில் உயர் அதிகாரியின் அழுத்தம் காரணமாக நேர்மையான அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து, கடமையை நிறைவேற்றும் சவாலான கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமுத்திரக்கனி தனது வழக்கமான கதாப்பாத்திரங்களை தவிர்த்து, எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கு கடந்த காலங்களில் வெளியான படங்கள் எதுவும் சரியான வெற்றியைத் தராத நிலையில், நடுத்தர வயது தந்தை கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப்படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஜெயம் ரவிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றிப்படம் கொடுத்த இயக்குநருக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button