கிராமப்புறங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நயினார் கோவில் வட்டத்திற்கு உட்பட்ட கொழுவூர், பாண்டியூர், கொடிக்குளம் மற்றும் அரியாங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மூன்று கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் ஐந்து கிலோ எடையுள்ள கணேஷ் புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்துள்ளனர். விற்பனை செய்த கடைகளுக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, 15 நாட்களுக்கு கடையை மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள், உரிமம் பெறவில்லை என்றால் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

இந்த சோதனையில் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் எஸ் பி சுரேஷ் தலைமையில், முத்துச்சாமி, சத்தீஸ்வரன், வெண்ணிலா ஆகியோர் குழுவினரை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




