பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி ! போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஆலூத்துபாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ்(44). இவர் தனது மனைவி சந்திரகலா மற்றும் மகனுடன் வளையாங்காடு தோட்டத்தில் வசித்து வருகிறார். மேலும் பல்லடம் அருகே உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேலாளராக பணியாற்றியதோடு, தருண் டெக்ஸ்டைல்ஸ் என்கிற பெயரில் சுல்சர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் நூல் பெற்று துணியாக கூலிக்கு நெசவு செய்து கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிராஜ் வேலை பார்த்துவரும் நிறுவனத்தில் நூல் வாங்கி துணியாக நெய்துகொடுத்தில் இவருக்கு கூலியாக மட்டும் ரூ.42 லட்சம் பாக்கி தொகை கொடுக்க வேண்டியிருந்துள்ளது. பின்னர் தனக்கு வரவேண்டிய பாக்கி தொகையை டெக்ஸ்டைல் உரிமையாளர் சந்திரசேகரிடம் மணிராஜ் போனில் கேட்ட போது, தங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள துணியை நீங்கள் தரவேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் 60 அடியாட்களுடன் மணிராஜின் வீட்டிற்கு சென்று வீட்டின் முன்புற கேட்டை இடித்து தள்ளி மணிராஜை கொல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் உயிருக்கு போராடிய நிலையில், தாக்குதலுக்கு ஆளான மணிராஜையும், இரத்த வெள்ளத்தில் கதறிய அவரது மனைவியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அதன்பிறகு உறவினர்கள் உதவியுடன் மணிராஜை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.