பல்லடத்தில் தனியார் குடோனில் பற்றி எரியும் தீ… உயிரை பணயம் வைத்த வடமாநில தொழிலாளர்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது மாணிக்காபுரம் கிராமம். இங்குள்ள கே.பி. கார்டன் குடியிருப்பு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குடோன் அமைதிருக்கும் இடத்திற்கு அருகே திடீரென புகை மூட்டத்துடன் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அங்கிருந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட கரும் புகை சுமார் 3 கிலோமீட்டர் வரை பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீயை அங்கிருந்த வட மாநில தொழிலாளர்கள் சாதாரணமாக பைப் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தும், குடங்களில் தண்ணீர் ஊற்றியும் ஆபத்தான முறையில் தீ ஜுவாலைக்கு நடுவே நின்று போராடினர். இருப்பினும் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில் இது போன்று ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து நலுவி விட்டனர். பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமாக இது போன்று எளிதில் தீ பற்றி எரிய கூடிய பிளாஸ்டிக் குடோன்கள் அமைந்திருக்கும். ஆனால் கே.பி.கார்டன் குடியிருப்பு பகுதியில் இது போன்று குடோன்கள் அமைப்பதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் எனவும், இது போன்ற தீ விபத்துக்கள் குறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் அளிக்க முன் வரவேண்டும்.
மேலும் தீயை அணைக்க எந்த ஒரு பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது