நீதிமன்ற உத்தரவு பழனி நகராட்சிக்கு பொருந்தாதா ?.! தலைவிரித்தாடும் பேனர் கலாச்சாரம் !
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினசரி பழனி நகராட்சியில், குறிப்பாக பேருந்து நிலைய ரவுண்டானா, EB கார்னர், டிராவல்ஸ் கார்னர், மயில் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாகவே காட்சியளிக்கும்.
பக்தர்களும், பொதுமக்களும் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில், குறிப்பாக நடைபாதை, சாலையோர மின் கம்பங்களில் பேனர்களை வைத்து, நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதோடு, போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையும், பழனி நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதி மன்றமும், தமிழ்நாடு அரசும் விதித்துள்ள நிலையில், பழனி நகராட்சி நிர்வாகம் நீதி மன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுள்ளனரா ? நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பழனி நகராட்சிக்கு பொருந்தாதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொது இடங்களில் அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை உடனடியாக அகற்றுவதோடு, சம்பத்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும், நகர கட்டமைப்பை சீர் செய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகமும் இனிமேலாவது தங்கள் கடமையை சரியாக செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்…