“நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைவிமர்சனம்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “நாய் சேகர்”
திருமணமாகி பல வருடங்களாக வேலா ராமமூர்த்திக்கு குழந்தை இல்லாததால் பைரவர் கோவிலில் குழந்தை வரம் வேண்டி வழிபடுவதற்காக இரவு குடும்பத்தினருடன் தங்குகிறார். அப்போது ஒரு முனிவர் அவர்களிடம் ஒரு நாய்க்குட்டியை கொடுத்து இது இருக்குமிடத்தில் சகல செல்வங்களும் பெருகும் என்கிறார். அதன்பிறகு மறுநாள் வீடு திரும்பியதும் அவர்களது முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது. அவர்களுக்கு ஆண்குழந்தையும் பிறக்கிறது.
முனிவர் கொடுத்த நாய்க்குட்டி வீட்டிற்கு வந்தலிருந்துதான் முன்னேற்றம் என்பதால் அந்த நாயை பராமரிக்க ஒருவரை நியமிக்கிறார்கள். அவர் அந்த நாயின் ரகசியத்தை தெரிந்து கொண்டு நாயிடன் காணாமல் போகிறார். இவர்களது குடும்பமும் கஷ்டங்களை சந்திக்க, பேரன் வடிவேலுவுடன் சச்சு சென்னையில் குடியேறுகிறார்.
வடிவேலு வளர்ந்ததும் விலையுயர்ந்த நாய்களைத் திருடி அவர்களிடமே பணம் பறிக்கும் வேலையைச் செய்து வருகிறார். இதற்கிடையில் சிட்டியில் பெரிய ரவுடியான ஆனந்தராஜின் நாயை கடத்துகிறார்கள். ஆனந்தராஜ் கும்பல் வடிவேலுவைத் தேடுகிறது. இந்நிலையில் ஏற்கனவே தங்கள் வீட்டில் இருந்த அதிர்ஷ்ட நாயைப் பற்றிய பழைய கதையை வடிவேலு விடம் சொல்கிறார் அவரது பாட்டி சச்சு. அந்த நாய் ஹைதராபாத்தில் இருப்பதாக தெரிய வருகிறது. அந்த நாயைத் தேடி ஹைதராபாத் செல்கிறார் வடிவேலு.
தங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்ட நாயை கண்டுபிடித்து மீட்டு கொண்டுவந்தாரா ? இல்லையா ? ரவடி ஆனந்தராஜிடமிருந்து தப்பித்தாரா என்பது மீதிக்கதை….
பிரமாண்டமான படங்களைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் வடிவேலு என இரண்டு பிரமாண்டங்கள் இணைந்திருக்கும் போது, படத்தின் திரைக்கதையில் இயக்குனர் சுராஜ் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
படத்தில் இசை இதமாகவும் பக்கபலமாகவும் அமைந்துள்ளது.
படத்தில் நடித்துள்ள ஆனந்தராஜ், வேலா ராமமூர்த்தி, சச்சு, பூச்சி முருகன், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் தங்களுக்கு கொடுத்த பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.