மகன் கைவிட்ட நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்றுவதற்காக தவிக்கும் முதியவர் !
சினிமாக்காரன் நிறுவனம் சார்பில், சென்னியப்பன் தயாரிப்பில், ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவான “வான் மூன்று” திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ், லீலா தாம்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைப்படி… தான் விரும்பிய பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் சுஜித் குமார் ( ஆதித்யா பாஸ்கர் ). அதேபோல் தான் விரும்பிய காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் சுவாதி ( அம்மு அபிராமி ). இவர்கள் இருவரும் ஒரே வார்டில் எதிரெதிர் பெட்டில் சிகிச்சை பெறுகின்றனர். பின்னர் இருவரும் தங்களது தவறை உணர்ந்து, எதார்த்தமான வாழ்க்கையை வாழ நினைக்கின்றனர்.
இதேபோல் தனது தந்தையின் பேச்சை மீறி, தான் விரும்பிய காதலனை திருமணம் செய்கிறாள் ஜோதி ( அபிராமி வெங்கடாசலம் ). சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இல்லற வாழ்வில்,ஜோதி திடீரென மயங்கி விழ, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ஜோதி. பரிசோதனைக்குப் பிறகு ஜோதிக்கு ப்ரைன் டியூமர் நோய் இருப்பது தெரிய வருகிறது. இந்நிலையில் இவரது கனவன் ஜோஷ்வாவும் ( வினோத் கிஷன் ) மனைவியை சந்தோஷமா பார்த்துக் கொள்கிறார். மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஜோதி, அறுவைச் சிகிச்சைக்குச் செல்வதற்கு முன் தனது தந்தையை பார்க்க விரும்புகிறார்.
மேலும் வயதான தம்பதியர் சிவம் ( டெல்லி கணேஷ் ), சித்ரா ( லீலா தாம்சன் ) இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சித்ராவிற்கு இதயத்தில் கோளாறு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அறுவைச் சிகிச்சை செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது. தனது ஒரே மகனிடம் சென்று பணம் கேட்டும் கிடைக்காத நிலையில் விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறார் சிவம். மனைவி மீதிருந்த அன்பால் கஷ்டங்கள் எதையும் சித்ராவிடம் சொல்லாமல் சமாளிக்கிறார் சிவம். இருவரும் நாற்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் என்பதால் சித்ரா புரிந்து கொள்கிறார். கடந்தகால நினைவுகளை இருவரும் அசைபோடும் போது, இருவருக்குமான அற்புதமான காதலை வெளிப்படுத்துகின்றனர்.
சுஜித் குமார், சுவாதி இருவருக்கும் காதல் மலர்ந்ததா ? ஜோதி அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து தந்தையோடு இணைந்தாரா ? இல்லையா ? சித்ராவின் உடல்நிலை என்னவானது என்பது மீதிக்கதை…
இந்தப் படத்தில் மூன்று தலைமுறையினரின் காதலை மிகவும் அற்புதமாக திரைக்கதை, வசனங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப பின்னணியில், மறைந்த இயக்குனர் கே. பாலச்சந்தர் படம் பார்த்த திருப்தி.
டெல்லி கணேஷ், லீலா தாம்சன் இருவரது காதலை வெளிப்படுத்தும் போது, வயதான பெற்றோரை அனாதையாக தவிக்க விடாமல் பேணிக்காக்க வேண்டும் என்கிற கருத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாவதற்கு முன், தியேட்டரில் வெளியாகி வெகுஜன மக்களுக்கு இந்தக் கதையின் கரு சென்றடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.
படக்குழுவினர் அனைவருக்கும் நமது நாற்காலி செய்தி ( மாதம் இருமுறை இதழ் ) குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.