“ஹாட் ஸ்பாட் _2” படத்தின் விமர்சனம்

ஜே.கே.பி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், அஷ்வின், பவானி ஶ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பிரியா பவானி ஷங்கர், சஞ்சனா திவாரி, எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஹாட் ஸ்பாட்_2”.
கதைப்படி… ஒரு தயாரிப்பாளரிடம் பெண் இயக்குநர் ( பிரியா பவானி ஷங்கர் ) கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவே காட்சிகளாக நகர்கிறது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரின் தீவிர ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் இரு நாயகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டு ரசிகர்களின் குடும்பத்தினரையும் கடத்தி வைத்துக்கொண்டு, இரு நாயகர்களும் ஒரே லைனில் பேச வேண்டும். பேசினால் குடும்பத்தினரை விடுவிப்பதாக கெடுவிதிக்கிறது கடத்தல் கும்பல். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

வெளிநாட்டில் படித்துவிட்டு ஊர் திரும்பும் மகளை ( சஞ்சனா ) அழைத்துவர தந்தை ( தம்பி ராமையா ) விமான நிலையம் செல்கிறார். மகள் அரைகுறை ஆடையுடன் ஒரு பையனுடன் வருகிறார். தந்தை தமிழ் கலாச்சாரம் பண்பாடு, பழக்க வழக்கத்தில் ஊரிப்போனவர் என்பதால் மகளின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். பின்னர் அவரது முதலாளி தனது மகனுக்கு பெண் கேட்கிறார். அப்போதும் அரைகுறை ஆடையில் வந்து, வெளிநாட்டு கலாச்சாரத்துடன் பேசி இதுதான் மாடர்ன் என்கிறார். குடும்பத்தில் ஈகோ உருவாகி குழப்பம் நீடிக்கிறது. அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..

இதேபோல் மேலும் இரண்டு கதைகள். ஒரு படத்தில் நான்கு கதைகள். நான்கும் வெவ்வேறு திசைகளில் பயணித்து விறுவிறுப்பாக நகர்கிறது.
தயாரிப்பாளரிடம் கூறிய நான்கு கதைகளில், எந்த கதை தேர்வானது, எந்த நோக்கத்திற்காக இந்த கதைகள் சொல்லப்பட்டது என்பது மீதிக்கதை.




