
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட காவல்கணிப்பாளராக இருப்பவர் யாதவ் கிரிஷ் ஐ.பி.எஸ். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வார். ஏற்கனவே திருப்பூர் மாநகரத்தில் பணியாற்றிய அனுபவத்தில் புறநகரில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்கள் செயல்பட தடை விதித்ததோடு, சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த அனுமதியற்ற பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனிடையே திருப்பூர் மாநகரின் எல்லைக்கு மிக அருகே உள்ள அவரப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் மீது நடவடிக்கை எடுத்து மூடி சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே சீல் வைத்த சில மணி நேரத்திலேயே, சீலை அகற்றிவிட்டு சூடாக சிக்கன் மட்டனுடன் பரபரப்பாக பார் இயங்கியது. டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே சரக்கை விற்பனை செய்ய ஆரம்பித்த பார் உரிமையாளர் நேற்று 09.03.24 ஞாயிற்று கிழமை காலை முதலே மேற்படி பாரில் டேபிளில் தலை கவிழ்ந்தபடி முகத்தில் காயங்களுடன் மூச்சு பேச்சின்றி ஒருவர் இருந்துள்ளார்.

இதனை பார்த்த குடிமகன்கள் பார் உரிமையாளருக்கு தகவல் கொடுக்க, பின்னர் தான் அந்த நபர் இறந்துவிட்டார் என தெரிந்துள்ளது. அதன்பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், இறந்துகிடந்தவர் குழந்தைவேல் என்பதும், பனியன் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்துபோன குழந்தைவேலுவின் முகத்தில் காயம் ஏற்பட்டதற்கான தடையத்தையும் கண்டறிந்துள்ளனர். பின்னர் உடலை உடற்கூறாய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.


இதனிடையே சீல் வைக்கப்பட்ட பாரில் ஒரு உயிர் பிரிந்த நிலையிலும்,தற்போதுவரை பார் இயங்கி வருகிறது. மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைக்கு, பார் உரிமையாளர் எடுத்திருக்கும் அண்டர் கவர் ஆப்ரேஷன் முறியடிக்கப்படுமா ? அல்லது அனுமதியற்ற பார் தொடர்ந்து செயல்படுமா ? காவல்துறை உயர் அதிகாரி பூட்டி சீல் வைத்த பார், பல்லடம் காவல்துறையினருக்கு தெரியாமல் இயங்க முடியுமா ? போன்ற சந்தேகங்களுக்கு காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைக்கு பின்னர் தான் பதில் கிடைக்கும். காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ? காத்திருப்போம்…