நூல் விலை உயர்வு… : வேலைவாய்ப்பை இழக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்
நூல் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் காட்டன் ராஜாவாக விளங்கும் திருப்பூர் தனது பொலிவை இழந்து பாலியஸ்டர் துணிகளுக்கு மாறி வருகிறது. குளிர்கால ஆர்டர்கள் கைநழுவி சென்ற நிலையில் டாலர் சிட்டியை நம்பி உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் வளமாகவும் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் ஆடை உற்பத்தித் தொழில் விளங்குகிறது. தமிழகத்தின் தட்பவெப்ப சூழல் மற்றும் பருத்தி உற்பத்தி போன்றவை இத்துறையில் திருப்பூர், கோவை, ஈரோடு கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் ஆடை உற்பத்தியை முதன்மை தொழிலாக மாற்றி உள்ளது. குறிப்பாக பருத்தி ஆடையாக உள்ள பின்னலாடை உற்பத்தியில் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் திருப்பூர் புகழ் பெற்று விளங்கி வருகிறது.
`இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் திருப்பூர் பனியன்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. காட்டன் பனியன் தேவைக்கு இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்த வர்த்தகரும் திருப்பூர் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அதிகபட்ச வேலைவாய்ப்பினை இந்த துறை வழங்குவதால் இத்துறையை கையகப்படுத்தி தங்கள் மாநிலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என ஆந்திரா, ஒடிசா, உத்திரபிரதேசம் போன்ற பல மாநிலங்களும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் உதவி கோரி வரும் நிலையில் திருப்பூரில் அமைந்துள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி போன்றவை திருப்பூரை தொடர்ந்து முதலிடத்தில் வைத்துள்ளது.
அதே போல் ஏற்றுமதியிலும் இந்திய அளவில் திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் தொழில் மையமாக விளங்குகிறது. இந்நிலையில் நூல் விலை உயர்வு திருப்பூரின் பெருமைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நூல் விலையானது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த கிலோ நூல் விலை தற்போது 486 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்பனையாகிறது.
இதனால் நூறு ரூபாய்க்கு விற்பனையாகி வந்த டி-சர்ட்டை தற்பொழுது 200 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை ஏற்றம் குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்கள் பெறுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பின்னலாடை துறையில் இந்தியாவிற்கு போட்டி நாடுகளாக சீனா, வியட்நாம் பங்களாதேஷ் போன்ற நாடுகள் உள்ளது. இந்த நாடுகளில் நூல் விலை குறைவாக உள்ள சூழலில் நம்மை விட 25 சதவிகிதம் விலை குறைவாக ஏற்றுமதி செய்கின்றனர்.
இதன் காரணமாக ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆஸ்திரேலியா நாட்டு வர்த்தகர்கள் குறைவான விலை உள்ள போட்டி நாடுகளுக்கு தங்கள் ஆர்டர்களை கொடுக்க துவங்கி உள்ளனர். உலக அரங்கில் 20 சதவிகித பருத்தியை உற்பத்தி செய்யும் இந்தியா, 3.7 சதவிகித ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி மூலம் உலக பங்களிப்பை பூர்த்தி செய்கிறது.
ஆடை துறையின் மிக முக்கிய மூலப்பொருளான பருத்தி மற்றும் நூல் ஆகியவை நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுவது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மூலப்பொருட்கள் கொண்டு மதிப்பு கூட்டல் செய்து உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்ற நிலையில் மூலப்பொருட்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்யப்பட்டு தற்போது உள்நாட்டு தேவைக்கு இறக்குமதி செய்யும் சூழலுக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் நூல் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் உள்நாட்டில் பஞ்சு பதுக்கல் செய்யப்பட்டுள்ளதால் விலை உயர்வு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று எனவும், தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் வளமான ஆடை துறையை அழிக்கும் நோக்கில் இந்த தட்டுப்பாடு கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாலியஸ்டர் துணிகள் கொண்டு ஆடை உற்பத்தி செய்யப்பட்டால் லூதியானா போன்ற பிற மாநிலங்களுக்கு தொழில்துறை நகர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாலியஸ்டர் துணி மற்றும் இழைகள் லூதியானாவில் தயாரிக்கப்படுவதால் அங்கு உற்பத்தி செலவும் குறைவாகவே பிடிப்பதால் பல நிறுவனங்கள் தற்போதே தங்கள் நிறுவனத்தை லூதியானாவில் நிறுவ துவங்கி உள்ளனர். திருப்பூரிலும் உள்நாட்டு தேவைக்கான பனியன் ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 50 சதவீதம் பாலியஸ்டர் ஆடைகளுக்கு மாறி உள்ளனர்.
பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் காட்டன் ஆடைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த காட்டன் ஆடைகளை வாங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் விற்பனை சரிவடைந்து வருவதாகவும் இதனை ஈடு செய்ய பாலியஸ்டர் ஆடைகளை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து வருவதாகவும், பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் திருப்பூரில் வேலைவாய்ப்பு குறையும் அபாயம் உள்ளதாகவும், முழுமையாக பாலியஸ்டர் துணிக்கு பனியன் துறை மாறினால் பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
பின்னலாடை துறையை காப்பாற்றவும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பஞ்சு பதுக்கலை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் ஆடை துறையைக் காப்பாற்ற தமிழக அரசு பருத்தி புரட்சியை ஏற்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நமது நிருபர்