தமிழகம்

கலைஞர் நூலக கட்டிடத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி !

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில், மணமேல்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட அம்மா பட்டிணம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது கலைஞர் நூலகம். இந்த நூலகம் அமைந்துள்ள இடம் தனக்குச் சொந்தமான இடம் என மணமேல்குடி காவல்துறையினர் உடந்தையோடு, இஸ்மாயில் என்பவர் கலைஞர் நூலக கட்டிடத்தை இடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக கலைஞர் நூலக அலுவலக உதவியாளர் கூறுகையில்.. மணமேல்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அம்பிகாபதி நான்கைந்து பேருடன் நூலகத்திற்குள் நுழைந்து, உள்ளே யாரும் இருக்க கூடாது, அனைவரும் வெளியேறுங்கள் என ஆவேசமாக அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கிய தாகவும், நூலகத்தின் பெயர் பலகையை பெயர்த்து வீசியதுடன், இந்த இடம் இஸ்மாயிலுக்குச் சொந்தமானது. உடனே காலி செய்யவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்வேன் என மிரட்டியிருக்கிறார்.

பின்னர் மணல்மேல்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜாவுக்கு போண் செய்து, இந்த இடம் இஸ்மாயிலுக்குச் சொந்தமானது என எழுதிக் கொடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் பேசியிருக்கிறார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜா, அரசு புறம்போக்கு நிலத்திற்கு நான் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீதிமன்றத்திற்குச் சென்றால் நான் மாட்டிக்கொள்வேன் என சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் போணை துண்டித்துள்ளார். இந்த தகவலை நூலக நிர்வாகிக்கும் கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே இதே காவல்நிலையத்தில், இரு தரப்பினரையும் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து,  நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் ஆய்வாளர் முடித்துவைத்த பிரச்சினையை சிறப்பு உதவி ஆய்வாளர் அம்பிகாபதி பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு, ஒரு தரப்பிற்கு ஆதரவாக அரசாங்கத்தில் ஈடுபடுகிறார் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

மேலும் இந்த நூலகம் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடம் என வருவாய் ஆவணங்களில் உள்ள நிலையில், பல்வேறு உட்பிரிவுகளாக பிரித்து, பணத்தைப் பெற்றுக்கொண்டு சிலருக்கு பட்டா வழங்கியுள்ளனர். அதோடு போலி ஆவணங்கள் தயார்செய்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவும் செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நூலக கட்டிடம் சம்பந்தமான இடப்பிரச்சினையில், நீதிமன்றம் செல்ல, காவல் ஆய்வாளர் அறிவுறுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளாமல் முடித்து வைத்த புகாரை, எதன் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அம்பிகாபதி விசாரணை செய்வதாக அத்துமீறலில் ஈடுபடுகிறார் என, புதுக்கோட்டை மாவட்ட உயர் காவல் அதிகாரிகளும், தமிழ்நாடு காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது சம்பந்தமான விரிவான செய்தி வரும் இதழில்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button