அரசு அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சியின் பொறுப்பாளராகவே செயல்படுவதை பல இடங்களில் பார்த்து வருகிறோம் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில். உடுமலைப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி செயலராக பணியில் இருப்பவர் கந்தவடிவேல். இவர் பெரியகோட்டை ஊராட்சி செயலரா ? இல்லை அதிமுகவின் உடுமலைப்பேட்டை ஒன்றிய செயலாளரா ? என்ற கேள்வி பெரியகோட்டை மக்கள் முதல் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய த்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இரவு காவலர்கள் வரை அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி அதற்கு காரணம் அவரின் செயல்பாடுகள்.
இந்த கந்தவடிவேல் கடந்த 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் மடத்துக்குளம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மனோகரனின் உறவினர். அந்த தேர்தல் காலகட்டத்தில் இவர் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து மனோகரனுக்காக கட்சி வேலையும், தேர்தல் வேலையும் பார்த்தவர் தான் இந்த கந்தவடிவேல். சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆனார் மனோகரன். மனோகரனுக்கும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் தீவிர விசுவாசி என்ற போர்வையில் உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் வலம் வந்தார் கந்தவடிவேல். உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தவடிவேலை கண்டு அஞ்சும் நிலை தான் இன்றும் இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடுமலை நகராட்சியில் நடந்த அரசு விழா ஒன்றில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் முழு நேர தீவிர அண்ணா திமுக கட்சி பொறுப்பாளர் ஆகவே வலம் வந்தார் கந்தவடிவேல். இதனைக் கண்ட உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் கந்தவடிவேலை கண்டித்ததாக தெரிகிறது.இருப்பினும் அரசியல்வாதிகளின் ஆசி உள்ளதால் அதிகாரிகளின் உத்தரவுகளை பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக சுற்றி வருகிறார் . இதன் ஒரு பகுதியாக முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் திட்டத்தை பயன்படுத்திக்கொண்ட கந்தவேல் பெரியகோட்டை ஊராட்சியில் 250க்கும் மேற்பட்ட முறைப்படுத்தப்படாத குடிநீர் இணைப்பு இருப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்புதல் கேட்டு இருக்கிறார்.இவ்வளவு இணைப்புகள் இல்லை என்பதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் இவரிடம் கேள்வி கேட்டதற்கு ஆம்.. இல்லை தான் இது அனைத்தும் புதிதாக போட உள்ள குடிநீர் இணைப்புகள் தான், இது அனைத்தும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறவினர்களுக்கும் , மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன் உறவினருக்கும் கொடுக்க வேண்டிய குடிநீர் இணைப்புகள், இதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டியுள்ளார்.இப்படி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெயரைச் சொல்லியும் திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன் பெயரைச் சொல்லியும் உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். ஊராட்சி செயலர்களுக்கு எந்த ஊராட்சிக்கு மாறுதல் தரவேண்டும் , யாருக்கு தரக்கூடாது.. யார் எங்கே பணிபுரிய வேண்டும் என்பதை முடிவு செய்வதே இந்த கந்தவடிவேல் தானாம்.
இப்படி முறையற்ற குடிநீர் இணைப்பு ,ஊராட்சி நிதியில் முறைகேடு, ரிசர்வ் சைட் தாரை வார்த்தல், பில்டிங் அப்ரூவல், சைட் அப்ரூவல் என தான் பணிபுரியும் காலகட்டங்களில் கோடிகளை சுருட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் இவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு சம்பாதித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பிலான 5 ஏக்கர் தோட்டத்தை வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது .அவ்வாறு வாங்கப்பட்ட அந்த தோட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் எதிர் மனுதாரர் ஐ அடித்து உதைத்தும்.. பஞ்சாயத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன் பெயரை பயன்படுத்தியும் அந்தப் பிரச்சினையை தன் வசமாக்கிக் கொண்டகவும் தெரிகிறது.
கடலூர் புயல் நிவாரண நிதிக்கு தன் சொந்த செலவில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை வாரி வழங்கிய இந்த ஊராட்சி செயலாளரை இன்றுவரை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையும், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனும் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன ? கோடி ரூபாய்க்கு சொத்து ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்க காசு எங்கிருந்து வந்தது இந்த கந்தவடிவேலுவிற்கு ? இது அனைத்தும் பெரியகோட்டை ஊராட்சி செயலாளராக இருந்து முறைகேடாகசம்பாதித்தது தான். இவ்வாறு தங்களது பெயரை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கந்தவடிவேலை ஏன் இன்று வரை மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரனும் கண்டுகொள்ளவில்லை. இப்படியே விட்டால் ஒன்றியத்தை தாண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயனுக்கு சவால் விடும் நிலைக்கு வந்து விடுவார் இந்த கந்தவடிவேல் என பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.
–முத்துப்பாண்டி