அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதை எதிர்த்து ஓசூரைச் சேர்ந்தவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். வழக்கு தள்ளுபடியானதை அதிமுகவினர் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் முன்னார் அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் பின்னணி குறித்து விசாரிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகோயோர்களின் பெயரில் 7 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார்கள். ஆனால் இந்த தொகைக்கு நிகராக அவர்களிடம் சேமிப்பு இல்லை. இவர்களின் சேமிப்பாக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மட்டுமே தெரிவித்துள்ளனர். சேமிப்பிற்கும், இவர்கள் வாங்கிய சொத்துகளின் மதிப்பிற்கும் வித்தியாசம் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தங்கமணியின் மருமகன் பல்வேறு நிறுவனங்களுக்கு இயக்குனராக இருந்து வருகிறார். இதற்கெல்லாம் முதலீடுகள் எங்கிருந்து வந்தது என்று இவர்களை விசாரணை செய்ய விசாரணை வளையத்துக்கள் கொண்டு வர இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தவறான முறையில் சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கிரிப்டோ கரன்சி நபர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் யாருக்கும் தெரியாத நிலையில், யார் மூலமாக இந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார் என்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டறிவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.
தங்கமணி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திவாலாகும் நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் அப்பொழுது கூறினார்கள். தேசிய கம்பெனிகள் நலவாரியத்திற்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் பணம் பெறப்படாதவர்களால் வழக்கு தொடரப்பட்டது. மின்சாரத் துறையை தனியார் மயமாக்க வேண்டும் அல்லது தமிழக அரசு ஒரு பெரிய தொகையை முதலீடு செலுத்த வேண்டும். அப்பொழுது தான் இந்தத் துறையை காப்பாற்ற முடியும் என்கிற நிலை அப்பொழுது இருந்தது. வருடாந்திர வரவு, செலவுகளில் நஷ்டம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டிய நிலை வரலாம் என்ற செய்திகளும் உலாவந்தது.
இந்த சோதனையின் முக்கிய அம்சமே, தங்கமணி அனைவருக்கும் முன்னோடியாக கிரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் கரன்சி இன்று இந்தியாவிலேயே செயல்பாட்டிற்கு வராத கரன்சியில் முதலீடு செய்துள்ளார். கிரிப்டோ கரன்சியை இந்தியாவிற்கு கொண்டு வரலாமா? என்று மத்திய அரசு யோசனைகள் செய்வதாகத்தான் நாடாளுமன்றத்தில் கூறியது. ரிசர்வ் வங்கியும் இதற்கு தடையில்லை ஆனால் அனுமதியும் இல்லை என்று கூறியுள்ளது. கிரிப்டோ கரன்சியை வாங்குபவர்கள் டாலரில் தான் வாங்க வேண்டும் என்கிற நிலையில் இவர் லஞ்சப் பணத்தில் தான் வாங்கியிருப்பார் என்கிற கோணத்திலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.
பா.ஜ.கவினரும் தங்கமணி வீட்டில் நடைபெற்ற சோதனையை ரசிப்பதாகவும் தெரியவருகிறது. தமிழகத்தில் வலுவான எதிர்கட்சியாக பா.ஜ.க. ஆக வேண்டுமெனில் தங்கமணி போன்ற அதிமுக முக்கிய புள்ளிகளை வலுவிலக்கச் செய்ய வேண்டும். ஆகையால் தான் பா.ஜ.க. இந்த சோதனையை ரசிப்பதாக பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடத்தப்படுகிறது. அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் பதவி வகித்த துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது விசாரணையும், வழக்குப்பதிவும் செய்யப்படாதது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.
அமைச்சர்கள் தவறு செய்வதற்கு முக்கிய காரணமே அந்தந்த துறைகளின் அதிகாரிகள் தானே. அந்த அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட வழக்குகளில் சேர்த்து, வழக்குப்பதிவு செய்து தவறு செய்தவர்களை பணிநீக்கம் செய்து சிறை தண்டணை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன் வைக்கிறார்கள். மாநகராட்சியில் கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ். ஆணையராக இருந்த போது, ஊழல் செய்திருப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலினே அப்போது குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமைச்சர்கள் பதவி வகித்த துறைகளின் அதிகாரிகளே தற்போது முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணை இல்லாமல் ஊழல் செய்ய முடியுமா? அமைச்சர்களின் மீது வழக்கு பதிவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குண்டூசி