பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு”
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் பாறைக்குழிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை கட்டிடம் சின்ன கோடங்கிபாளையத்தில் உள்ளது. இதனிடையே தொழில்சாலையை ஒட்டியுள்ள பாறைகுழியில் அருண்குமாருக்கு சொந்தமான காஸ்டிங் தொழில் சாலையில் இருந்து கழிவுகளை பாறைகுழியில் கொட்டிவந்துள்ளார்.
மேலும் இப்பகுதியில் பாசன ஓடைகள் இல்லாத நிலையில் இதுபோன்று பாறை குழியில் சேமிக்கப்படும் தண்ணீரினால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் காஸ்டிங் கழிவுகள் கொட்டப்படுவதால் நீரின் தன்மை பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி விவசாயிகள், உரிமையாளர் அருண்குமாரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கழிவுகளை அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதால் விவசாயிகள் அதிரடியாக கழிவுகளை அருண்குமாருக்கு சொந்தமான நிறுவன வளாகத்தில் கொண்டு சென்று கொட்டியுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மேற்படி தொழில்சாலை கட்டிடம் அமைந்துள்ள இடம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தை ஒட்டி ஆபத்தான பாறைக்குழி உள்ளதால் எவ்வாறு தொழில்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது கேள்விகுறியாகியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளதா? சுமார் 25 ஆயிரம் சதுரடி கொண்ட கட்டிடம் கட்ட அனுமதித்தது யார்? என்பது போன்ற கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. மேலும் தொழில்சாலையில் நமது நாட்டின் தேசிய கொடியுடன் அந்நிய நாடான ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து அழகு பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய நாட்டின் நிறுவனம் பல்லடத்தில் நேரடி தொழில் துவங்க யாரிடம் அனுமதி பெற்றனர்?.
மேலும் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள சூலூரில் இருந்து மிக அருகில் அந்நிய நாட்டின் தொழில்சாலைக்கு அனுமதி வழங்கி இருப்பது எவ்வாறு?. மேலும் ஆபத்து நிறைந்த பாறைக்குழியை ஒட்டி விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்திற்கு யார் பொறுப்பு? அந்நிய நாட்டின் தொழில்சாலை இதுபோன்று பாதுகாப்பில்லாத இடத்தில் தொழில்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் காஸ்டிங் கழிவுகளை கொட்டி நிலத்தடி நீரை பாழ்படுத்தும் இது போன்ற நிறுவனங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.