கொரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கும்பலை கைது செய்த போலீசார்
கொரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் தான் தற்போது மதுரை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக நமக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மதுரை, உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் கொங்கபட்டி அருகே உசிலம்பட்டியிலிருந்து மதுரை சென்ற கொரியர் வாகனம் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த உசிலம்பட்டி காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை சோதனையிட்டதில் அந்த கொரியர் வாகனத்தில் நூறு மூட்டை ரேஷன் அரிசி இருந்திருக்கிறது.உடனடியாக கொரியர் வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநரையும்,கிளினரையும் கைது விசாரணை செய்துள்ளனர்.
கொரியர் வாகன ஓட்டுநர் காவல்துறையினரிடம் கூறுகையில்… உசிலம்பட்டியிலிருந்து மதுரை சிந்தாமணியில் உள்ள அரிசி ஆலைக்கு பல வருடங்களாக ரேஷன் அரிசி கடத்தப் படுகிறது. கொரோனா காலத்தில் கொரியர் வாகனம் என்பதால் யாரும் சோதனை செய்ய மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் ரேஷன் கடையின் விற்பனையாளர்கள் சுந்தரபாண்டி, ராஜபாண்டி உள்ளிட்ட மேலும் நான்கு பேர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி விடுவார்கள். நானும் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் கொண்டு சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.
இதுசம்பந்தமாக உசிலம்பட்டி காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆறுபேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரேஷன் அரிசி வைக்கும் குடோன் செயலாளர் முருகன் என்கிற 123 முருகன் தான் இந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு மூலையாக செயல்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததாக நமக்கு தகவல்கள் வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசே மானியம் செலுத்தி ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசியை வழங்கி வருகிறது. இந்த அரிசியை ஏழை,எளியவர்களுக்கு வழங்காமல் மொத்தமாக அரிசி ஆலைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது. அவர்களை வேலையிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
நீண்ட காலமாக இந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு யார் யார் துணை போனார்கள்? மதுரை மாவட்ட காவல்துறையில் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல்துறையினர் என்ன செய்தார்கள்? சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்த காவல்துறையினர் கண்களில் அரிசி கடத்தல் வாகனம் தென்படவில்லையா ? என்ற பல்வேறு கேள்விகளை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். இந்த விஷயத்தில் மதுரை மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்பதை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.