நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் ! பொதுமக்கள் அவதி !

திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம் முதல் கொமரலிங்கம், கொழுமம் வழித்தடம் மிக முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. கொமரலிங்கத்தில் இருந்து மடத்துக்குளம் வரும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன் சாலை பணிகளின் போது பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு இடத்தில் மட்டுமே அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட சில இடங்களில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் பெயரளவில் மட்டுமே மணல் மூட்டைகளை வைத்து போதுமான தடுப்பு வசதிகளை செய்யாமல் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டு, சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் விபத்துகள் ஏற்படுவதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் புழுதி காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நீண்ட காலமாக தாமதமாகும் சாலைப் பணிகளால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வேலைகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




