தமிழகம்

பகுதிநேர ஆசிரியர்களின் நிறைவேறாத நீண்டநாள் கோரிக்கை!

தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களாக வாரம் மூன்று அரைநாட்கள் என மாதத்திற்கு பன்னிரெண்டு அரைநாட்கள் பணிபுரியும் வகையில் நியமிக்கப்பட்டார்கள். பணியில் சேரும்போது ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியமாக அப்போது வழங்கப்பட்டது. சம்பள உயர்வு முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதை அடுத்து 2017 ஆம் ஆண்டு சம்பள உயர்வு எழுநூறு ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பள உயர்வு இரண்டாயிரத்து முந்நூறு ரூபாய் வழங்கப்பட்டது.

அப்போது நான்காயிரம் காலியிடங்கள் போக, 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் தான் பணிபுரிந்தனர். இந்த நிலையில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இன்றைய முதல்வர் அப்போது திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். திமுகவும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகின்றார்.

10 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வரிடம் பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கையோடு வலியுறுத்தி வருகின்றோம். இரண்டு ஆண்டு முடிந்தும் கோரிக்கைக்கு பதில் இல்லை. இதனால், பள்ளிக்கல்வி வளாகத்தில் 2023 ஆண்டு செப்டம்பர் 25 முதல் பத்து நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிக்கல்வி அமைச்சர் அக்டோபர் 4 அன்று சம்பள உயர்வு 2,500 ரூபாய் வழங்கப்படும் மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என இரண்டு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் 2,500 ரூபாய் சம்பள உயர்வுக்கு மட்டும் இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டு பின்னர் அது தனிப் பரிவர்த்தனையாகவே இந்த ஏழு மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்ற 10 ஆயிரம் சம்பளத்துடன், தற்போதைய 2,500 சம்பள உயர்வை இணைத்து மொத்தமாக 12,500 ரூபாயாக இனி வழங்க வேண்டும் அதுபோல், இந்த மருத்துவ காப்பீடு ஓராண்டு முடியும் நிலையில் இதுவரை அரசாணையே போடவில்லை.

மருத்துவ காப்பீடு கிடைத்தால் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதால் உடனே அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும். உடல் நலன் இல்லாமல் அவ்வப்போது சிலர் இறந்துவிடுகின்றனர்.

அவ்வாறு இறக்கும் அந்த குடும்பங்களுக்கு அரசு 10 லட்சம் வழங்க வேண்டும். முதல்வர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமல் ஏற்கனவே 40 மாதங்கள் தாமதம் ஆகிவிட்டது.

இனிமேலும் தாமதம் செய்ய வேண்டாம். 13 ஆண்டுகளாக, தற்போதுள்ள பன்னிரெண்டாயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாகவும், ரூபாய் 12,500 என்ற குறைவான சம்பளத்திலும், மே மாதம் சம்பளம் இல்லாமலும், பணி புரிந்து வருவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் மேம்பட பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தி, பணிப்பாதுகாப்பு வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்து காலமுறை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button