நட்சத்திர விடுதிக்கு மாறும் தயாரிப்பாளர்கள் சங்கம் ! “படைத்தலைவன்” படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் !
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படைத்தலைவன்” படத்தினை பரமசிவம் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் ( சென்சார் சர்டிபிகேட் ) பெறுவதற்கு விண்ணப்பிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நாடியுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, உங்கள்மீது தயாரிப்பாளர் பழனிவேல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் சம்பந்தமாக பேசி முடித்தபிறகு “படைத்தலைவன்” படத்தினை தணிக்கை செய்ய கடிதம் வழங்குவதாக கூறியுள்ளனர்.
மேலும் இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொண்டதில், தயாரிப்பாளர் பழனிவேல் இந்தியில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். மேற்கொண்டு அந்தப் படத்தின் பணிகளை தொடர முடியாமல், தயாரிப்பாளர் பரமசிவத்திடம் குறிப்பிட்ட தொகைக்கு அந்த படத்தை ஒப்படைத்து விட்டார். அதற்கான தொகையை பரமசிவம் தராததால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சங்கத்தில் உறுப்பினர் புகார் கொடுப்பதும், நிர்வாகிகள் இருதரப்பையும் சங்கத்திற்கு அழைத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை, ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட தயாரிப்பாளர் பரமசிவம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேச்சுவார்த்தைக்கு வராததால், வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், இணையச் செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பஞ்சாயத்து பேசி முடித்துள்ளனர்.
சங்கத்தின் நிர்வாகிகள் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று பஞ்சாயத்து பேசிய சம்பவம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து பேச இடவசதி இல்லையா ? பல ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இந்த சங்கத்தில்தானே பேசி முடிக்கப்பட்டுள்ளது, இப்போது மட்டும் ஏன் புதிதாக நிர்வாகிகள் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று பஞ்சாயத்து பேசினர். இனிமேல் இதுபோன்ற நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்படுமா ? என் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.