“நேசிப்பாயா” படத்தின் மூலம் நேசிக்க வைத்த அதிதி ஷங்கர் ! நேசிப்பாயா படத்தின் திரைவிமர்சனம்
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்சலின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நேசிப்பாயா”.
கதைப்படி.. அர்ஜூன் ( ஆகாஷ் முரளி ), தியா ( அதிதி ஷங்கர் ) இருவரும் காதலித்து பிரிந்தவர்கள். தியா போர்ச்சுக்கல் நாட்டில் தொழிலதிபர் சரத்குமாரின் மகனை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்கிற செய்தி நண்பர் மூலம் தெரியவர, அர்ஜூன் அதிர்ச்சி அடைந்து, காதலிக்கும்போது இருவருக்குமான கடந்தகால நினைவுகள் வந்து போகிறது. பின்னர் போர்ச்சுக்கல் கிளம்பி செல்கிறார். அங்கு தியாவின் வீட்டிலேயே தங்குகிறார். தியாவின் வழக்கறிஞர் உதவியுடன், தியா அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்குச் சென்று தியாவை சந்திக்க முயற்சிக்கின்றனர். தியா சந்திக்க விருப்பமில்லை என்கிறார். இருந்தாலும் தியாவை தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில், கொலைக்கான காரணங்களையும், பின்னணியையும் கண்டறிய முயற்சிக்கிறார். இடையிடையே இருவரது காதல் நினைவுகள் வந்து போகிறது .
ஆர்ஜூனின் முயற்சிக்குப் பலன் கிடைத்ததா ? உண்மையான குற்றவாளி யார் ? தியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாரா ? என்பது மீதிக்கதை..
நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகான காதல் கதையுடன், சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் விஷ்ணு வர்தன். காதலர்களுக்கான காட்சிகள் தவிர்த்து, போர்ச்சுக்கலில் கதை நகரும் விதம் பார்வையாளர்களோடு கனெக்ட் ஆகாமல் செல்கிறது. திரைக்கதையில் இயக்குநர் கொஞ்சம் கவணம் செலுத்தியிருக்கலாம்.
நாயகனுக்கு இந்த படம் முதல் படமாக இருந்தாலும், நல்ல அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வரும் காலங்களில் ஆக்ஷன் நடிகருக்கான வாய்ப்பு அதிகமாகவே தென்படுகிறது. நாயகி அதிதி ஷங்கரின் நடிப்பு அனைவரையும் நேசிக்க வைக்கிறது.
அதேபோல் சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் ஆகியோரும் தங்களது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.