“தரைப்படை” படத்தின் விமர்சனம்

ஸ்டோன் எக்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின், விஜய் விஷ்வா, ஜீவா தங்கவேல், சாய் தன்யா, ஆர்த்தி, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தரைப்படை”.
கதைப்படி… ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் வட்டி தருவதாக, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து, கோடிக்கணக்கில் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறது ஒரு கும்பல். பின்னர் கும்பல் தலைவனை துப்பாக்கியால் டேவிட் ( பிரஜின் ) சுட்டுவிட்டு, ஒரு சூட்கேஸுடன் செல்கிறார். குண்டடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நபரை மீட்டு ரகசியமாக சிகிச்சை அளித்து அவரிடம் ஏதோ தகவல்களை பெற முயல்கிறார் ஜீவா தங்கவேல். பின்னர் அடிபட்டவரிடம் இருந்த சூட்கேஸ் எங்கே என தேட ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையில் சூட்கேஸுடன் சென்ற பிரஜினை கொன்றால் ஒரு கோடி தருவதாக, விஜய் விஷ்வாவிற்கு தகவல் வர, அவரும் அதற்கான வேலைகளில் இரங்குகிறார். அவனை கொன்றால் ஒரு கோடி. ஆனால் அந்த சூட்கேஸை அடித்தால் ஆயிரம் கோடி என தெரிய வருகிறது.
இந்நிலையில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று அந்த ஊருக்கு தேவையான சாலை, பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட தேவைகளை செய்து தருவதாகவும், தன்னிடம் உள்ள தங்கக் கட்டிகளை, பணமாக மாற்ற வேண்டும் என உறவினர் மூலம் ஏற்பாடுகள் செய்கிறார் பிரஜின். பின்னர் தனது காதலி தங்கத்தை பார்க்க வேண்டும் எனக் கூற, அவரை அழைத்துக்கொண்டு தான் மறைத்து வைத்திருந்த இடத்தில் வந்து பார்த்தபோது, சூட்கேஸ் காணமல் போனதை உணர்ந்து ஆவேசமாகிறார்.

அந்த சூட்கேஸ் யாருக்கு சொந்தமானது ? குண்டடிப்பட்ட நபர் கூறும் ரகசியம் என்ன ? சூட்கேஸ் யாருக்கு கிடைக்கிறது என்பது மீதிக்கதை…
பணத்திற்காக கேங்க்ஸ்டர் கும்பல் திட்டம் தீட்டுவதும், அதனை செயல்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும், குறுகிய காலத்தில் பணக்காரராக நினைத்து, முதலீடு செய்து ஏமாந்து, சீரழியும் மக்களின் நிலையும் கதைக்களமாக எடுத்துக்கொண்ட இயக்குநர், திரைக்கதையில் கவணம் செலுத்த தவறிவிட்டார்.
பிரஜினின் சண்டை காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஜீவா முழுக்கமுழுக்க ரஜினிகாந்தின் சாயலை படம் முழுவதும் பயன்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு பெரிதாக சோபிக்கவில்லை. விஜய் விஷ்வாவும் காதலியுடன் சிகரெட் புகைத்தவாறு ஓவர் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.