பள்ளி, கல்லூரிகளில் மூன்று பெண்களுடன் காதல்… யாரை கரம் பிடித்தார் என்பதுதான்..?.! சபாநாயகன் திரைவிமர்சனம்
கிளியர் வாட்டர் ஃபிலிம்ஸ், ஐ சினிமா நிறுவனங்களின் தயாரிப்பில், சி.எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சபாநாயகன்”.
கதைப்படி… தேர்தல் சமயம் என்பதால் கலவரம் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது, மது போதையில் நண்பர்களுடன் சாலையில் ஆட்டம் போட்டுவிட்டு போலீஸிடம் சிக்குகிறார் அரவிந்த் ( அசோக் செல்வன் ). ஜீப்பில் செல்லும்போது மேலும் ஒருவர் சிக்குகிறார். அவன் காதல் தோல்வியால் மது அருந்த சென்றேன் என்றதும் அவனை இறக்கி விடப்பட, தனது காதல் அனுபவத்தை சொல்ல ஆரம்பிக்கிறார் அரவிந்த்.
ஈரோட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் போது ஈஷா ( கார்த்திகா முரளிதரன் ) மீது காதல் ஏற்பட, அந்த காதலை அவளிடம் சொல்ல நினைக்கும்போது, தேர்வு முடிந்து அனைவரும் பிரிந்து செல்கின்றனர். அதன்பிறகு கல்லூரி படிப்பை தொடரும்போது ரியா ( சாந்தினி ) என்பவரை காதலிக்கிறார். அவரது வீட்டில் உள்ளவர்கள் அரவிந்தை நன்கு அறிந்தவர்கள் என்றாலும், அந்த காதலும் கைகூடாமல் போகிறது. பின்னர் முதுகலை படிப்பை தொடரும்போது ( மேகா ஆகாஷ் ) மீது காதல் வயப்பட இருவரும் ஒருவரையொருவர் புரிந்து காதலிக்கின்றனர். இந்த காதலாவது கைகூடும் என நினைக்கையில், இருவரும் பிரிந்து செல்கின்றனர். எதேச்சையாக ஒருநாள் தனது சகோதரியின் கடையில் பள்ளியில் படித்த ஈஷாவை சந்திக்கிறார். தனது விருப்பத்தை சொல்லாமலே பிரிந்த பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்ததோடு, இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அரவிந்த் காதலித்த பெண்களில், யாரையாவது கரம் பிடித்தாரா ? அவரது வாழ்க்கை என்னானது என்பது மீதிக்கதை…
பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வயசு கோளாறு காரணமாக ஏற்படும் காதலை, புதுவிதமான கோணத்தில், இன்றைய இளசுகளின் இதயங்களை கவரும் வண்ணம் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.
பள்ளி மாணவர் கதாபாத்திரத்திற்காக அசோக் செல்வன் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகிகள், நண்பர்களாக நடித்தவர்கள் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.