தொழிலாளர்களின் துரோகி ஆர்.கே. செல்வமணி ! உருவானது நடப்பு தொழிலாளர்கள் சம்மேளனம் ! தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் !
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, தலைவர் ஆர் கே செல்வமணி பெயரில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், சினிமா சங்கங்களின் தாய் சங்கத்தினை அவதூறாக பேசியிருப்பதை வண்மையாக கண்டிக்கிறோம். காலங்காலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி செயல்பட இருப்பதாக கூறியிருப்பதை வரவேற்பதாகவும், தங்கள் தேவைக்கு சங்கங்களை உடைத்து குளிர்காந்து, அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் எண்ணம் கொண்ட தங்களின் கடந்தகால வரலாறே சாட்சி.
திரைத்துறையில் பல இக்கட்டான சூழ்நிலைகளில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒத்துழைப்பது போல் பாசாங்கு காட்டி நடித்ததும், வெளியே எதிராக செயல்படுவதும் அப்பாவி தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும். கலைஞர் ஆட்சியில் பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தை வியாபார நோக்கத்திற்காக மாற்றித் தருமாறு அமைச்சர், அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து வருவதோடு, இந்த அரசு எதுவுமே செய்யவில்லை என பொதுவெளியில் குற்றம் சுமத்துவது, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை குறைசொல்லி, தொழிற்சங்க தலைவராக தொழிலாளர்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி வருவதையும் அனைவரும் அறிந்துள்ளனர்.
நடிகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய பேச்சு வார்த்தை சமயத்தில் சம்பந்தமில்லாமல் பேசுவதும், பின்னர் கூட்டுக்குழு மீது பழிபோடுவது என செல்வமணி தொழிற்சங்க தலைவர் பதவிக்கு தகுதியானவர் இல்லை. ஆகையால் நடப்பு தொழிலாளர்கள் சம்மேளனம் மூலம் படப்பிடிப்பு பணிகளைச் செய்ய இருப்பதையும் கூறியுள்ளனர்.
இதுசம்பந்தமாக தயாரிப்பாளர்கள் நம்மிடம் பேசுகையில்.. காலங்காலமாக தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, அவதூறு ஏற்படும் வகையில் தொழிற்சங்க தலைவர் கடிதம் அனுப்புகிறார். சினிமா தொழிலாளர்களுக்கு எவ்வளவோ நலத்திட்டங்களை செய்துவரும் அரசுக்கு எதிராக செயல்பட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறார். செல்வமணியின் கையாலாகாத செயலால் இன்று, நடப்பு பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தை வைத்து தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு பணிகளைச் தொடர இருக்கிறது. இவர் தலைவராக தொடர்ந்தால் சினிமாவை நம்பி வாழும் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது நிச்சயம் என்றனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது.. இதுபோன்ற இக்கட்டான நிலையில், துறை சார்ந்த அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைத்து, தற்போதைய பெப்சி நிர்வாகத்தை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். அரசாங்கத்திற்கு இணக்கமாக செயல்படாமல், தான்தோன்றி தனமாக செயல்பட்டால் தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இடம் வழங்கிய அரசிடம், வீடு வாங்கித்தர முடியவில்லையே, இவர்கள் எதற்கு நிர்வாகத்தில் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
– குண்டூசி