“போலாமா ஊர்கோலம்”இசை வெளியீட்டு விழாவில்… பேரரசுக்கு ஏற்பட்ட திடீர் தமிழ்ப்பற்று
“போலாமா ஊர்கோலம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திடீரென தமிழ் மொழிக்கு ஆதரவாக மொழிப்பற்று பற்றி பேசத் தொடங்கினார் இயக்குனர் பேரரசு. ஏற்கனவே இந்தி மொழிக்கு ஆதரவாக பாஜகவினர் கொடிபிடித்து வரும் நிலையில், பாஜகவின் ஆதரவாளரான பேரரசு தமிழுக்கு ஆதரவாக கொடி பிடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பேரரசு பேசுகையில்…
” கறுப்பான ஆண்களைத் தேர்ந்தெடுத்து நாயகனாக்கி சூப்பர்ஸ்டாராக்குவது மறைந்த இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் பாணி. கருப்பான பெண்களை தேர்ந்தெடுத்து நாயகியாக்கி சிறந்த நடிகைக்கான விருதுகளை வாங்கச் செய்வது மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பாணி. அந்த வகையில் பாலுமகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் உருவான இப்படத்தின் நாயகி “சக்தி மகேந்திரா” இந்த படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சிறந்த நடிகையாக வளர வேண்டும் என வாழ்த்தினார்.
இப்படத்தின் இயக்குநருக்கு முன்கோபம் அதிகம் என படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுசூதனன் குறிப்பிட்டார். ஒவ்வொரு இயக்குநருக்கும் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதற்கு முன் கோபம் இருப்பதுதான் சரியானது. பொருத்தமானது. ஏனெனில் திரை உலகில் இயக்குநர் கோபப்பட்டால் தான் இங்கு காரியம் நடக்கும்.
மேலும் பேசுகையில்..இன்றைய சூழலில் பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப் பாடவேளையை வேறு பிரிவு ஆசிரியர்கள் கைப்பற்றி விடுகிறார்கள். மைதானம் கூட இருப்பதில்லை எனக் குறிப்பிட்டார்கள். ஆனால் இனி பள்ளிக் கூடங்களில் தமிழ் இருக்குமா ..! என்பதே சந்தேகம்தான். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக இருக்கிறது. தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் மொழி, விருப்ப பாடமாக இருக்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து யார் கேள்வி கேட்பது? இந்தியை எதிர்க்கிறோம் என்பதெல்லாம் வேறு. தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களை சிலரை அழைத்து தமிழில் எழுதச் சொல்லுங்கள். தமிழில் எழுதியதை வாசித்து படிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் தமிழ்மொழி எவ்வளவு ஆபத்தான சூழலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும். தற்போதைய சூழலில் பள்ளிக்கூடங்களிலிருந்து மைதானங்கள் மறைந்து போயிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் மாணவர்கள் தமிழை எழுதவும், தமிழை வாசிக்கவும் மறந்து போன தலைமுறை உருவாகிவிடும்.
கால்பந்து விளையாட்டு தான் இந்தியாவில் சிறந்த விளையாட்டு. அந்த விளையாட்டு தான், இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதும் விளையாட்டு. அதுதான் சுறுசுறுப்பான விளையாட்டு. ஆனால் சோம்பேறி விளையாட்டு என குறிப்பிடப்படும் கிரிக்கெட் இங்கு பிரபலமாகிவிட்டது. வழுக்கு மர விளையாட்டு போன்றதுதான் சினிமா. போராடி.. போராடி… போராடி.. வழுக்கி வழுக்கி வெற்றி இலக்கைத் தொடும் வரை யாரும் நம்மை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் வெற்றி பெற்ற பின்பு நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்.
பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் அனைவரும் வசதி வாய்ப்புள்ளவர்கள். ஆனால் ‘போலாமா ஊர்கோலம்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் தான் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் உணர்வுபூர்வமாகப் பணியாற்றுகிறார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் தான் அடையாளத்திற்காகப் போராடும் அறிமுக கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் ஆதரவளிக்கின்றன. ‘போலாமா ஊர்கோலம்’ படம் வெளியான பிறகு, வெற்றி ஊர்வலமாக மாறும்” என்றார்