சினிமா

5 லட்சம் கொடுத்தால் கலைமாமணி விருது ! விலை பேசும் சினிமா பிரபலம் !

தமிழ்நாடு அரசு கலைத்துறையில் சேவை புரிந்த கலைஞர்களை பாராட்டி, கௌரவிக்கும் வகையில், கலைமாமணி விருது வழங்கி வருகிறது. இந்த விருது வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், இருபது பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஒன்பது பேர் நிர்வாகிகளாக உள்ளனர். இந்த குழு செய்தித்துறை அமைச்சர் தலைமையில் இயங்கும்.  இவர்கள்தான் விருதுக்கு விண்ணப்பிக்கும், நபர்களை தேர்வுசெய்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்.

இந்த குழுவில் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத பிரபல இயக்குநரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான ஆர்.வி. உதயகுமார், ஐந்து லட்சம் கொடுத்தால், இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் உங்கள் பெயரை சேர்த்து, உங்களுக்கு கலைமாமணி விருது வாங்கித் தருகிறேன் என்று பேசிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக விசாரித்தபோது.. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா உள்ளிட்ட பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்தவர் சுப்ரீம் சுந்தர். இவர் சண்டை பயிற்சியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், பெப்சி நிர்வாகியாகவும் இருந்தவர். இவரிடம் ஆர்.வி. உதயகுமார், நீங்கள் எவ்வளோ படங்களில் பணிபுரிந்துள்ளீர்கள், ஐந்து லட்சம் கொடுத்தால் உங்களுக்கு கலைமாமணி விருது வாங்கித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஐந்து லட்சம் கொடுத்தால்தான் விருது என்றால், அப்படிப்பட்ட விருது எனக்குத் தேவையில்லை என உதயகுமார் மூஞ்சியில் அறைந்த மாதிரி கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் ஆவண காப்பக உறுப்பினராக உதயகுமார் இருந்தபோது, இதேபோல் வேலைகள் செய்து தருவதாக பணம் வசூலித்தது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு தெரியவந்ததும், உதயகுமாரை எச்சரித்து வெளியே அனுப்பிய சம்பவம் அனைவரும் அறிந்ததே ! அதிலிருந்து இன்றுவரை அரசு சார்ந்த எந்தவிதமான பதவியும் இவருக்கு வழங்கப்படவில்லை.

தற்சமயம் ஆர்‌வி. உதயகுமாருக்கு எந்தவித வேலையும், வருமானமும் இல்லை. இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருப்பதால், சினிமா விழாக்களுக்கு விருந்தினராக அழைக்கிறார்கள். ஒரு விழாவில் கலந்துகொள்ள ஐந்தாயிரம் வாங்கிக் கொண்டு கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் அரசுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத ஆர்.வி. உதயகுமார், தமிழ்நாடு அரசு, கலைஞர்களுக்கு வழங்கும் கலைமாமணி விருதை ஐந்து லட்சத்திற்கு விலைபேசி,  சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசும், செய்தித்துறை அமைச்சரும் கலைத்துறையில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கலைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button