காசோலை மோசடி வழக்கில், லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைதண்டனை உறுதி
திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி செய்த வழக்கில் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்.
நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் எண்ணி 7 நாள் படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி. கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் கடனாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு லிங்குசாமி கடன் பெற்றிருக்கிறார். இவர் வாங்கிய கடனுக்காக கொடுத்த 35 லட்சத்துக்கான காசோலை, லிங்குசாமியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது. பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் பலமுறை லிங்குசாமியுடம் பணத்தை கேட்டும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். வங்கியில் பணம் இல்லாதது தெரிந்தும் ஏமாற்றும் நோக்குடன் காசோலை கொடுத்து ஏமாற்றும் நோக்கத்தில் லிங்குசாமி செயல்பட்டதாக, லிங்குசாமி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு கடந்த 22 ஆகஸ்ட் 2022 அன்று ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கடந்த வாரம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்காமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்து லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.