திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம் கொடுத்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கியது. அவ்வாறு வழங்கிய நிலங்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமரபூண்டி ஊராட்சியில், மாற்று இடமாக அரசு வழங்கிய இடத்தில் குடிசை அமைத்து சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிலர் குழந்தைகளின் படிப்பு, தொழில் சம்பந்தமாக நகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அப்போது குடியேறாமல் காலியாக உள்ள இடங்களை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் மாவட்ட ஆட்சியரோ அரசுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு மாற்று இடமாக வழங்கப்பட்டு, அவர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை வேறு நபர்களுக்கு எப்படி வழங்க முடியும் என மறுத்துள்ளார் அப்போதைய மாவட்ட ஆட்சியர். ஆனால் அமரபூண்டி ஊராட்சி தலைவர் மணோகரன் தற்போது தனக்கு வேண்டிய நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை வழங்கியுள்ளதாக இடத்தின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக இடத்தின் உரிமையாளர்கள் கூறுகையில்.. மாற்று இடமாக அரசு வழங்கிய இடத்தில், வீடு கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்ட போது ஊராட்சி மன்றத் தலைவர் மணோகரன் ஆட்களுடன் வந்து இடத்தைவிட்டு வெளியேறுமாறு மிரட்டல் விடுக்கிறார். அரசு எங்களுக்கு வழங்கிய இடத்தைவிட்டு நாங்கள் ஏன் வெளியேற வேண்டும் ? ஆகையால் ஆயக்குடி காவல்நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மணோகரன், எங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தை பெரும் தொகையை பெற்றுக்கொண்டு, முறைகேடாக விற்பனை செய்துள்ளார். அவர் ஆளும் கட்சி என்பதால் அமைச்சர் சக்கரபாணி பெயரைச் சொல்லி மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம் என்கிறார்கள்.
மேலும் அமைச்சர் சக்கரபாணி பெயரைச் சொல்லி, இதுபோன்ற தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்றத் தலைவர் மணோகரன் மீது மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக் பாட்சா