அரசுப்பள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் ! போதிய சிகிச்சை இல்லாமல் பரிதவிப்பு !
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியராக அமுதா கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதே பள்ளியில் கரியாம்பாளையத்தை சேர்ந்த கணவரை இழந்த சாமாத்தாள் (45) என்பவர் துப்புரவு பணியாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த சாமாத்தாள் கழிவறைக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த மின் சாதனத்தை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாமாத்தாள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் கை கால்களில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அருகில் யாரும் உதவிக்கு இல்லாத சூழ்நிலையில், தானே எழுந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதனிடையே மறுநாள் சாமாத்தாளின் மகள் தலைமை ஆசிரியர் அமுதாவிடம் சென்று தனது தாயாருக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு தலைமை ஆசிரியை அலட்சியமாக பதில் அளித்ததோடு மருத்துவ உதவிக்கு தன்னால் எதுவும் செய்யமுடியாது என கை விரித்துள்ளார். இதனிடையே சாமாத்தாள் நாள் முழுவதும் வேலை பார்த்தால் ரூ.1000 தான் சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் கடந்த ஓராண்டாக கொடுக்கப்படாமல் சாமாத்தாளை கொத்தடிமை போல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ செலவுக்கு கூட சாமாத்தாளுக்கு வரவேண்டிய சம்பள நிலுவை தொகையை கொடுக்காமல் அலட்சியம் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு துப்புரவு தொழிலாளியின் அவல நிலையை போக்கி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதோடு, சம்பள நிலுவை தொகை கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்பார்ப்பாக உள்ளது.