வாட்ஸ்அப் வீடியோவால் பொன்னமராவதியில் வன்முறை : 1000 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய குரல்பதிவு சமூக ஊடகங்களில் பரவியதால் உண்டான பதற்றங்களைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் ‘பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1000 கிராமவாசிகள்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யாரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
பொன்னமராவதி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கூடி, காவல் துறையினரைத் தாக்கி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு சொந்தமான எட்டு வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், காயமடைந்த காவல் துறையினரை கொல்ல முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வாஜுக்கு எதிராகவும் அவரது சாதிப் பெண்களை இழிவாகவும் பேசி சமூக வலை தளங்களில் வெளியான வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர், பின்னர் கிராம மக்கள் ஊர்வலம் செல்லும் வழியில் சில கடைகளையும் உடைத்துள்ளனர், நள்ளிரவை தாண்டியும் முற்றுகை போராட்டம் தொடர்ந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் பொன்னமராவதி பேருந்து நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சுற்றியுள்ள 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை மறியல்கள் தொடங்கியது. மேலும் புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி, துவரங்குறிச்சி செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்தும் மரங்களை வெட்டிப் போட்டும் போக்குவரத்தை சிலர் முடக்கினர்.
பின்னர், கடைகளை அடைத்து கோஷங்களை எழுப்பி பொன்னமராவதி நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்து, “எங்களை தரக்குறைவாக பேசிய அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என கோஷம் எழுப்பினர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள், ஆண்கள் உள்பட அனைவரும் கையில் துடைப்பம், கழி போன்ற பொருட்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது திடீரென கல் வீசியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். நான்கு காவல்துறை வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சி தலைவர் பி.உமா மகேஸ்வரி, திருச்சி சரக காவல்துறை துனைத்தலைவர் ஆர்.லலிதாலெட்சுமி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது அந்த பகுதியில் சுமூகமான நிலை திரும்பி வருகிறது இந்நிலையில, மாவட்டம் முழுவதும் பரவலாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்கு பொன்னமராவதி வட்டத்துக்கு உட்பட்ட 49 வருவாய் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனினும் பாதுகாப்பு கருதி அங்கு 800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், பாதுகாப்பு கருதி பொன்னமராவதி வட்டத்துக்கு உட்பட்ட 49 வருவாய் கிராமங்களுக்கு இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
மேலும், “மூன்று நாட்களுக்குப் பிறகு சூழ்நிலையைப் பொருத்து 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும்.”
“சமூக வலைதளங்களில் இதுபோன்ற இழிவான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், பொன்னமராவதி பிரச்சனைக்கு காரணமான குரல்பதிவை வெளியிட்டவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர், அந்த குரல்பதிவு யார் யார் செல்போனிலிருந்து பார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.”
“வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் இருந்துகூட இந்த தகவல் பரவி இருக்கலாம் என்பதால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாட்ஸ் அப்பில் பதிவிட்டு இதுபோன்று தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும,” என்று தெரிவித்தார் உமா மகேஸ்வரி.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தியவர்கள் குறித்த விவரங்கள் காவல்துறையால் சேகரிக்கப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சி தலைவர் பி.உமா மகேஸ்வரி, பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜீ உள்ளிட்ட அதிகாரிகளுடனும், முக்கியப் பிரமுகர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.