பல்லடம் அருகே அதிரடியில் ஆட்சியர் ! படையெடுத்த அதிகாரிகள் ! பள்ளிக்கு திரும்பிய குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். மேலும் குடியிருப்புக்கு அருகிலேயே நரிக்குறவ இன மக்கள் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுமார் 50 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பம்பரம் விளையாடிய படி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது குறித்து நமது இணையதளத்தில் செய்தி வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துதாஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி செல்லா குழந்தைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து தீர்வு காண உத்தரவிட்டிருந்தார்.

அதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தயகுமார், பல்லடம் வட்டாட்சியர் ஜீவாநந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அறிவொளி நகரில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு படையெடுத்தனர். பின்னர் அங்கிருந்த நரிக்குறவ இன மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு அவர்களை அழைத்து உடனடியாக பள்ளிக்கு செல்ல அறிவுரை கூறினர்.

அதனைத்தொடர்ந்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்ல தயாராகினர். பின்னர் அதிகாரிகள் ஆட்டோ மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். அதிரடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அதிகாரிகளை களம் இறக்கிய மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்களும், பெற்றோர்களும் நன்றியை தெரிவித்தனர்.