வைகையில் அதிரடி ரெய்டு நடத்திய ஆர்.ஐ., : தெறித்து ஓடிய மணல் கொள்ளையர்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம், கச்சிராயிருப்பு, இரும்பாடி பகுதி வைகை ஆற்றில் தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் எடுக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறார்கள்.
மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆற்று மணல் மட்டுமல்லாமல் சவுடு மணலும் எடுக்க கலெக்டர்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றக் கிளை தடை உத்தரவு போட்டுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆற்றுமணல் திருடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சோழவந்தான் பகுதி வைகைப்படுகையில் பொக்லைன் மூலம் இரவு பகலாக மணல் அள்ளி அப்பகுதியை புதைகுழியாக ஆக்கி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியின் ஆசி பெற்றவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் சோழவந்தான் ஆர்.ஐ.க்கு, மணல் திருடுவது பற்றிப் புகார் வர, அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு ரெய்டு சென்றிருக்கிறார். இந்தத் தகவல் தெரிந்து செய்தியாளர்களும் சென்றிருக்கின்றனர். இவர்களைப் பார்த்ததும் அங்கு பொக்லைன் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த மணல் திருடர்கள் அங்கிருந்து எஸ்கேப்பாகி விட்டனர்.
அவர்களைப் பிடிக்க, முன்பே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தும் அவர்கள் அங்கு வராததால், ஆர்.ஐ அங்கிருந்தபடியே சோழவந்தான் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து அழைக்கும்போது, “ஸ்டேஷனில் யாரும் இல்லை வர முடியாது” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
ஒரு கான்ஸ்டபிளையாவது அனுப்புங்க சார் என்று ஆர்.ஐ. கெஞ்சிக் கேட்க நீண்ட நேரத்துக்குப் பிறகே காவல்துறை அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், அதற்குள் மணல் திருடர்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டனர்.
தற்போது மழை பெய்து தண்ணீர் ஓடுவதால் மணல் அள்ளுவதற்குத் தற்காலிக விடுமுறை விட்டுள்ளனர் மணல் திருடர்கள். இங்கு மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை, காவல்துறை என அனைத்துத் துறைகளுக்கும் மற்றும் இப்பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.
இதுபற்றி வாடிப்பட்டி தாசில்தாரிடம் கேட்டதற்கு “சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சமீபத்தில் மணல் திருடிய இரண்டு வண்டிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இப்போது அப்படி ஏதுமில்லை. மீறி நடந்தால் நடவடிக்கை தொடரும்“ என்றார்.