கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2011-&15 வரை, போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாகவும், இதற்கு அவரது சகோதரர் அசோக்குமார், நேர்முக உதவியாளர் சண்முகம், நெருங்கிய கூட்டாளி கார்த்திகேயன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்; மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அத்துடன், செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்டோர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், ஜூன் 14ல், செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜியை கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவரை ஐந்து நாட்கள் கஷ்டடி எடுத்து விசாரணை செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். அவர் கஷ்டடியில் இருந்தபோது, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அசோக்குமார் வீட்டில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய கோப்புகள் (பைல்) கிடைத்திருக்கிறது. அந்த கோப்புகளில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அரசு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கான டெண்டர் கொடுத்திருக்கிறது. அதில் அரசுக்கு ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிப்பதாகவும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னூறு கோடி ரூபாய் கமிஷன் பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளதாம்.
தமிழ்நாடு அரசுக்கு நிலக்கரி சப்ளை செய்ய 1. பாராதயா எனர்ஜி (இந்தோனேசியா), 2. மகேஸ்வரி (வடமாநில நிறுவனம்), 3.ஸ்மார்ட் சென் (ஹைதராபாத்), இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பத்து லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்ய லி-1, லி-2, லி-3 என பிரித்து தமிழ்நாடு அரசு டெண்டர் வழங்கியிருக்கிறது.
அதாவது 10 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ததில், ஒரு டன் நிலக்கரி சந்தை மதிப்பு 54 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பு 4,320 ரூபாய்), தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது 136 டாலர் (10,880 ரூபாய்க்கு) ஒரு டன் நிலக்கரியை கொள்முதல் செய்திருக்கிறது. இதனால் ஒரு டன் நிலக்கரிக்கு 6,560 ரூபாய் அமைச்சருக்கு கமிஷன் கிடைத்திருக்கிறது. இதில் செந்தில்பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய 300 கோடி ரூபாயை அவரது தம்பி அசோக்குமார் பெற்றிருக்கிறார். அந்தப் பணத்தில் மேலிட அமைச்சருக்கு பங்குத் தொகை கொடுக்கப்பட்டதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த தகவல்களை இந்திய உள்துறை அமைச்சருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது ஆலோசனைப்படி அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகிறார்களாம்.
இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின்புலமாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் கோலோச்சிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இருந்ததாகவும், அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியின் கீழ் அவரையும் விசாரணை வலையத்தில் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதற்கிடையே, இந்த மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு முறை சம்மன் அனுப்பினர். அவர் டிமிக்கி கொடுத்து வந்தார்.
கரூரில் அசோக்குமாரின் மாமியார் லட்சுமி, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, மகள் நிர்மலாவுக்கு’செட்டில்மென்ட்’ பத்திரம் வாயிலாக தானமாக கொடுத்துள்ளார்.
இதில், தில்லுமுல்லு நடந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக லட்சுமி, நிர்மலா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பினர். அவர்களும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
அசோக்குமார் தலைமறைவானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நிலை வரும் என அறிவித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
அவர் நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகளின் உதவியை நாடினர். அவர்கள், அசோக்குமார் பற்றி விசாரித்தனர். அவரின் மொபைல் போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
அவர், மொபைல் போன் செயலி வழியாக குடும்பத்தினரை தொடர்பு கொண்ட விபரம் தெரிய வந்தது. இதையடுத்து, ஐ.பி., அதிகாரிகள், அந்த குறிப்பிட்ட எண்ணில் இருந்து, தமிழகத்திற்கு தொடர்பு கொள்வது பற்றி தகவல் சேகரித்தனர். அந்த எண்ணை அசோக்குமார் பயன்படுத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து, கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் அருகே அசோக்குமாரை ஐ.பி., அதிகாரிகள் பிடித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தகவல் பரவியது. (ஆக.14) அமலாக்கதுறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
– குண்டூசி