திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். மேலும் குடியிருப்புக்கு அருகிலேயே நரிக்குறவ இன மக்கள் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள். இக்குடியிருப்புக்களில் போதிய அடிப்படை வசதியின்றி, அத்திப்பட்டு கிராமத்தை போல் உள்ளதாக அப்பகுதியினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்குள்ள குடியிருப்புக்களுக்கு இது வரை வருவாய்த்துறை மூலமாக பட்டா வழங்கப்படவில்லை. இதனிடையே அங்குள்ள குடியிருப்புகள் போர்வையாலும், தார்பாயினாலும் சுற்றப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீரில் நனைந்த படியே வீட்டில் தங்கவேண்டியுள்ளது. ஒரு வீட்டிற்கு இரண்டு குடும்பம், மூன்று குடும்பங்களாக தங்கியுள்ளனர்.
மேலும் புதிதாக திருமணம் செய்து வந்த தம்பதிகள் தார்பாய் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பரிதாப நிலையும் காணப்படுகிறது. இதை விட உச்சக்கட்ட கொடுமை சுமார் 50 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பம்பரம் விளையாடிய படி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர்.
ஆரம்பப்பள்ளி அறிவொளி நகரிலும், மேல் நிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி சற்று தொலைவில் இருந்தாலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அக்கரை காட்டுவதில்லை. இது குறித்து பேசிய பெற்றோர், போதிய வருமானம் இன்றி தவிக்கும் தங்களால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் வேனிற்கு பணம் செலுத்த வசதியில்லை எனவும், போதிய அடிப்படை வசதியில்லாததும் தான் காரணமாக தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, இல்லம் தேடி கல்வி, இடைநில்லா கல்வி என தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இது போன்று மாணவர்களை கண்காணித்து இடைநில்லா கல்வி வழங்கி நரிக்குறவர் இன மக்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்வு மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் அறிவொளி நகரின் பெயரில் மட்டும் ஒளியை வைத்துவிட்டு நரிக்குறவர் குடியிருப்பில் தெருவிளக்கே இல்லாமல் வெளிச்சத்தை தராமல் இருக்கும் ஆறுமுத்தாம்பாளையும் ஊராட்சி தலையிட்டு நடவடிக்கை எடுப்பதோடு, பட்டா வழங்கிட ஆவண செய்து அங்குள்ள குடியிருப்பு வாசிக்களின் வாழ்வில் ஒளியேற்றவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.