திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள காரைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் அந்தப் பகுதியில் திமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வருபவர். இவரது மனைவி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இருவரும் திருப்பூர் மூகாம்பிகை நகரில் கந்துவட்டி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வீரபாண்டியைச் சேர்ந்த சூரியகுமார் என்பவர் தனது 4 சென்ட் இடத்தை அபகரித்து போலியாக பத்திரப்பதிவு செய்து தன்னை ஏமாற்றியதாக கூறி நிலமோசடி செய்த திமுக பிரமுகர் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வீரபாண்டி காவல்நிலைய ஆய்வாளர் இந்தப் புகார் சம்பந்தமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால் வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளர் மணிமொழி நிலமோசடியில் ஈடுபட்டதாக புகார் கொடுத்த சூரியகுமாரை மட்டும் காவல்நிலையத்திற்கு அழைத்து பெயரளவுக்கு விசாரித்து விட்டு நிலமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் தெய்வசிகாமணியை இதுவரை எந்தவித விசாரணையும் செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சூரியகுமார் புலம்புகிறார்.
இது சம்பந்தமாக சூரியகுமார் நமது நிருபரிடம் கூறுகையில், நானும் எனது மனைவி செல்வியும் திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் பகுதியில் வசித்து வருகிறோம். நான் பிரபல மாத வார இதழ்களில் செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். நாங்கள் சொந்தமாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்காக குரு பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டோம். ஆனால் அவர்கள் 3.5 லட்சம் மட்டுமே பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு கட்டிடப் பணியை துவங்கினோம். ஆனால் பணப்பற்றாக்குறையால் கட்டிடப்பணி 75 சதவீதத்தோடு நின்றுவிட்டது. பணப்பற்றாக்குறையால் கட்டிடப்பணிகளை துவங்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்தபோது புரோக்கர் சக்திவேல் எங்களை கந்துவட்டி தொழில் செய்யும் தெய்வசிகாமணி தம்பதியர்களிடம் எங்களை அழைத்துச் சென்று 1.5 லட்சம் பணம் தருவதாகவும் ஏற்கனவே அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டு எங்களிடம் அடமானபத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் மொத்தம் 5 லட்சம் ரூபாய்க்கு எங்களுக்கு அடமானம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றுகூறி எங்களுக்கு படித்துக் காண்பிக்காமலே பத்திரப்பதிவாளரின் துணையுடன் 35 லட்ச ரூபாய் சொத்தை 5 லட்ச ரூபாய்க்கு விற்றதாக எங்களை ஏமாற்றி விட்டனர்.
நான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்ததும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் நிலமோசடி செய்த தெய்வசிகாமணியை விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டு என்னுடைய பத்திரத்தை திரும்பக் கொடுத்தார். நான் பெற்ற தொகையை திருப்பிக் கொடுக்க பிணையாக கொடுத்த மற்றொரு பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தார்.
இந்நிலையில் பத்திரப்பதிவாளர் உதவியுடன் பார்த்திபன் என்ற நபருக்கு எங்கள் சொத்தை தெய்வசிகாமணி பத்திரப்பதிவு செய்துவிட்டதாக அறிந்ததும் எனது குடும்பமே அதிர்ச்சியில் மூழ்கியது. எங்கள் சொத்தை மோசடி செய்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி, புரோக்கர்கள் சக்திவேல் பார்த்திபன் இவர்கள் மீது நான் கொடுத்த புகாருக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத வீரபாண்டி காவல்துறையினர், மோசடியாக நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த பத்திரப்பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடி அவர்கள் அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தருவது தான் எனது லட்சியம் என்கிறார் சூரியகுமார். அவரது லட்சியம் நிறைவேறுகிறதா காத்திருப்போம் நாமும்.
– முத்துப்பாண்டி