ஜாதிய வன்மத்தால் புறக்கணிக்கப்படும் ஊராட்சி மன்றத் தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாப்பாடி அலுவலகம் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்டு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியால் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் திறந்து வைக்கப்பட்ட நாளில் திறந்து மூடிய அலுவலகம் பல நாட்களாகியும் திறக்கப்படுவது இல்லை. சம்பிரதாயத்திற்கு ஏதாவது ஒருநாளில் ஒரு மணிநேரம் திறந்து வைக்கும் இந்த அலுவலகம் சமீப காலங்களில் திறக்கப்படாத மர்ம என்ன.? ஊராட்சிமன்ற அலுவலகம் அலுவலக பணி நாட்களில் கூட திறக்காமல் மூடியே வைத்திருப்பது பொதுமக்களிடம் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ஊராட்சி அலுவலகத்தை நாடிவரும் மக்கள் பூட்டியிருக்கும் அலுவலகத்தை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் செல்வது வழக்கமாகி விட்டது. மிடாப்பாடி ஊராட்சிமன்ற தலைவர் மோகன் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைகளை கேட்டதாக பார்த்ததே இல்லை என்கின்றனர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.
இது சம்பந்தமாக பெறப்பட்ட தகவலில் ஊராட்சிமன்ற அலுவலகம் ஏதேனும் முக்கிய நாட்களில் திறப்பார்கள் சில மணி நேரத்தில் மூடி விடுவார்கள் என்கின்றனர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள். இதற்கு முக்கிய காரணம் ஊராட்சி மன்றத் தலைவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், துணைத் தலைவர் அமைச்சர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஆகையால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் உட்கார்ந்து அலுவல் பணிகளைச் செய்யக்கூடாது என்கிற வக்கிரம் தான் என்கிறார்கள். மேலும் சமூக நீதி பேசும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இன்னும் சாதி தலைவிரித்தாடும் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும் இங்கு பணியாற்றும் ஊராட்சி செயலர் , துப்புறவு பணியாளர்கள் வேலைக்கு வருகிறார்களா ? இல்லையா ? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இப்பிரச்சனை சம்பந்தமாக தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா.? அல்லது அரசியல் காரணம் காட்டி விலகிச்செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
கா.சாதிக்பாட்ஷா