“பொய் வழக்கு” பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், தனது நிறுவனத்தின் மேலாளர் சம்பந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பரந்தாமன், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு உதவி ஆய்வாளர் துளசி ஆகிய இருவரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த மேலாளர், விசாரணை செய்யாமல் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த பொய் புகாரின் பேரில், அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர் என இருவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளார். அது தற்போது நிரூபணம் ஆனதால், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களில் பணம் படைத்தவர்களின் செல்வாக்கால், ஏழைகள் பாதிக்கப்படுவது, இவர்களைப் போன்ற ஒருசில காவலர்களால் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களை பணியிடை நீக்கம் செய்ததோடு, இல்லாமல் நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களைப் போன்ற காவல் துறையின் கருப்பு ஆடுகளை களையெடுக்கும் வகையில், துணிச்சலான முடிவுகளை எடுக்கும் காவல் துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸூக்கு நாற்காலி செய்தி இதழின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கே. எம். சிராஜூதீன்