பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து பல்லடம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணையில் பல்லடத்தை அடுத்த ராசாக்கவுண்டன்பாளையத்தில் உள்ள மளிகை கடையிலிருந்து பல்லடத்தில் உள்ள கடைகளுக்கு போலி பீடி சப்ளை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மாணிக்காபுரத்தை அடுத்த ராசாக்கவுண்டன்பாளைத்தில் மளிகை கடை நடத்திவரும் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் (72) என்பவரை கையும் களவுமாக பிடித்து போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் போலி பீடி வியாபாரி முருகனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல்லடத்தை சேர்ந்த பிரபல வியாபாரியிடம் பிரபல பீடி நிறுவனத்தின் போலி பீடிகள் மற்றும் ஹான்ஸ் குட்கா சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்து பல முறை போலீசாரிடம் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து முருகன் நடத்தி வரும் மளிகை கடையில் ரூ. 1 லட்சம் கொள்ளையடித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. பல நாள் காவல்துறை கண்ணில் மண்ணைத்தூவி போலி பீடி விற்பனையில் கலக்கி வந்த வியாபாரி முருகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.