வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல் வியாபாரிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி என் ஜி ஆர் சாலை பிரபல வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பாக பல்லடம் பேரூராட்சியாக இருந்த காலத்தில் அப்போதே என் ஜி ஆர் சாலையில் உள்ள வணிக கட்டிடங்கள், கட்டிடஅனுமதி பெற்று கட்டப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து 2010 ஆம் ஆண்டு நகராட்சியாக பல்லடம் தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வரன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பார்ப்பதற்கு அப்பாவி போல் தோற்றமளிக்கும் பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவராயம்பாளையத்தை சேர்ந்த அமமுக வின் மாவட்ட அவைத்தலைவர் பி. மூர்த்தி என்பவர் பல்லடம் என் ஜி ஆர் சாலையில் உள்ள பிரபல அன்னை ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் பார்க்கிங் வசதி குறித்தும், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெருக்கடி ஏற்படுவது குறித்தும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் தரும் உரிமைச்சட்டத்தின் கீழ் அன்னை ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் வரைபடம் குறித்தும் அனுமதி குறித்தும் பி. மூர்த்தி நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளார். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அன்னை ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே அன்னை ஸ்டோர்ஸ் அமைந்திருக்கும் இடம் 5 பேருக்கு சொந்தமானது எனவும், 5 பங்கில் தனித்தனியாக கடந்த 2004 ஆம் ஆண்டு வாக்கில் அன்றைய பல்லடம் பேரூராட்சியில் கட்டிட அனுமதி பெற்று கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மேற்படி கட்டிடம் தொடர்பாக அன்றைய ஆணையர் முன்னிலையில் ஆஜராகியபோது தனி நபரிடம் நேரில் ஆஜராகத்தேவையில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி மேற்படி பி. மூர்த்தி நகராட்சி அதிகாரிகளிடம் அன்னை ஸ்டோர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்னை ஸ்டோர்ஸ் உரிமையாளர்களின் ஒருவரான சந்தராஜ் என்பவரை அழைத்த நகராட்சி அதிகாரி மூர்த்தியை நேரில் சந்தித்து பேசி சமாதானப்படுத்திவிட்டு புகாரை வாபஸ் பெறுவதாக எழுதி வாங்கி வரும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதனிடையே தேவராயம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தியிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பெட்டிசனை வாபஸ் வாங்க ரூ. 15 லட்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய மூர்த்தி வீட்டில் இருந்தபடியே சுந்தராஜின் நண்பர் கதிர் என்பவரிடம் தொடர்புகொண்டுள்ளார். இதனையடுத்து கதிருடன் தேவராயம்பாளையம் சென்ற சுந்தராஜ் மூர்த்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தனது நிறுவனத்தின் கட்டிட அனுமதி குறித்தும், பார்க்கிங் வசதி குறித்தும் மூர்த்தியிடம் விளக்கமாக கூறிதாக கூறப்படுகிறது.
இதனை ஏற்காத மூர்த்தி ரூ. 15 லட்சத்திற்கு ஒரு பைசா கம்மியானாலும் பெட்டிசனை வாபஸ் வாங்க மாட்டேன் என்றும், மேலும் இந்த தொகையில் மேலும் முக்கிய இரண்டு நபர்களுக்கும் பங்கு தரவேண்டும் என்வும் கூறியுள்ளார். பின்னர் ரூ. 20 ஆயிரத்தை டோக்கன் அட்வான்சாக பெற்றுக்கொண்டுள்ளார். இதனிடையே பணம் கொடுக்க மனமில்லாத சுந்தராஜ் தன்னிடம் பணம் மிரட்டும் மூர்த்தி குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பிரபல வணிக நிறுவனங்களை குறிவைத்து தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெட்டிசன் போட்டு பேரம் பேசி பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. உதரணத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பல்லடத்தை அடுத்த கள்ளங்கிணறு பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் நூற்பாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தகவல் பெரும் உரிமைசட்டத்தின் கீழ் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக கூறி ஆலை நிர்வாகத்தை மூர்த்தி மிரட்டியுள்ளார். பின்னர் ஆலை நிர்வாகத்திடம் ஆதாரத்தை வெளியிடாமல் இருக்க ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் பல்வேறு கட்டங்களாக பேரம் பேசி ரூ.30 லட்சம் ரூ.20 லட்சம் என கேட்டு மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் மிரட்டல் அதிகரிக்கவே ஆலை நிர்வாகம் மூர்த்தி உட்பட 4 பேர் மீது பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் பல்லடம் காவல் நிலையத்தில் (FIR NO. 1850/2021) ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த அதிச்சியூட்டும் தகவலாக பல்லடத்தை அடுத்த பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூர்த்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமூக அக்கரையுடன் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய தகவலை பெற தகவல் தரும் உரிமைச்சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இதனை பயன்படுத்தி வியாபாரிகளையும்,நிறுவனங்களையும் பணம் கேட்டு மிரட்டி தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.