ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீண்டு புதிய நிர்வாகத்தின் கீழ் வ.உ.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி
இந்திய சுதந்திரத்திற்காக போராடி தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. இவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவராக பன்முகத் தன்மை கொண்டவர்.
இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. இவரால் மொழி பெயர்த்து எழுதிய “மனம் போல் வாழ்வு” என்ற நூலில் மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும், செயல்களாகவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது என்று எழுதி இருப்பார்.
இப்படிப்பட்ட மாமனிதரின் வழித்தோன்றல்களால் வ.உ.சி மெட்ரிகுலேசன் பள்ளி என்ற பெயரில் பரமக்குடியில் ஒரு பள்ளி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் துவக்கப்பள்ளியாக ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று மேல்நிலைப் பள்ளியாக கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் பள்ளியாக வளர்ந்து நிற்கிறது. இந்தப் பள்ளியை வௌ¢ளாளர் சமுதாயத்தினர் கூட்டாக சேர்ந்து பணம் முதலீடு செய்து ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தரும் நோக்கத்தில் அப்போதைய நிர்வாகிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பள்ளிகள் நகரில் வந்திருந்தாலும் இந்தப் பள்ளி தனித்தன்மையுடன் சிறப்பாக செயல்படுகிறது. பரமக்குடியைச் சுற்றி பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கல்வி கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு வாகன வசதியுடன் காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் என சிறப்பான அம்சங்களுடன் இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தாலும் இந்தப் பள்ளியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும் அதை தற்சமயம் மீட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்ததையடுத்து நமது குழுவினர் விசாரணையில் இறங்கினர்.
வெள்ளாளர் சமுதாயத்திற்கு சொந்தமானதுதான் வ.உ.சி மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி திருமண மண்டபம். இதன் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட நான்கு கோடிக்கு மேல் இருக்கும். இதனை நிர்வகிக்க சமுதாயத்தின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நிர்வகித்து வந்தார்கள். இதுதான் நடைமுறையாகவும் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக நான்கைந்து நபர்களின் சூழ்ச்சியால் தேர்தலே நடத்தாமல் அவர்களே இந்தப் பள்ளியை ஆக்கிரமித்து தங்களின் சொந்த சொத்து என்பது போல் சொந்தம் கொண்டாடி வந்தார்கள். அதையும் மீறி தேர்தல் நடத்தி அந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வசம் பள்ளியின் நிர்வாகத்தை ஒப்படைக்க மறுத்தார்கள்.
எங்கள் சமுதாய சங்க நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் படிவம் 7 வைத்து இருப்பவர்கள் மட்டுமே பள்ளியின் நிர்வாகத்தை நிர்வகிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக ஆறுபேர் கொண்ட தனிநபர் குழு இந்தப் பள்ளியை ஆக்கிரமித்து முறையான கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வந்தார்கள். புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பள்ளியின் நிர்வாகத்தை ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள். ஆகையால் இவர்களின் பிடியில் இருந்து பள்ளியை மீட்பதற்காக உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். அவர்களும் பள்ளியை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வசம் ஒப்படைக்க மறுத்து போராடியிருக்கிறார்கள். ஆனால் இறுதியில் புதிய நிர்வாகிகளே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
புதிய நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில் நீதி வென்று இருக்கிறது. குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்த வெள்ளாள சமுதாயத்திற்கு சொந்தமான இந்தப் பள்ளி புதிய நிர்வாகிகளின் நிர்வாகத்தின் கீழ் வெள்ளாள சமுதாய மக்களின் ஆதரவோடும், அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்ய காத்திருக்கிறது. இந்தப்பள்ளி கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முழுமையான தேர்ச்சி சதவீதத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்கள்.
எது எப்படியோ, எண்ணங்களே மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று சொன்ன வ.உ.சி.யின் கருத்தை நிறைவேற்றும் வகையில் வ.உ.சி.யின் வழித்தோன்றல்கள் சேவை மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து கல்விச் சேவையாற்ற வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணங்களாக இருக்கிறது.
- நமது நிருபர்