தண்ணீரில் மிதக்கும் அம்மா பூங்கா, ஆபத்தை உணராத குழந்தைகள் ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !
தமிழ்நாட்டில் 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக, ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம், 500 அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்படும் அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும். அம்மா பூங்கா கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி வரை கிராம ஊராட்சிக்கு சொந்தமான நிலம் அல்லது ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளி பாதுகாக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டது.
மேலும் அம்மா பூங்கா அமைக்கப்படும் புற நகரம் / நகரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் பகுதியில் அன்றைய அதிமுக எம்எல்ஏ நடராஜன் முயற்சியில் அம்மா பூங்கா உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த ஊராட்சி தேர்தலில் அதிமுக வை சேர்ந்த ஜெய்ந்தி கோவிந்தராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அம்மா பூங்கா பராமரிப்பின்றி அலங்கோலமாக தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது. மேலும் பூங்காவில்
அமைக்கப்பட்டுள்ள LED விளக்குகள் ஒளி இழந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்ட்/கிரானைட் பெஞ்சுகள் அல்லது எஃகினால் ஆன பெஞ்சுகள் சேதமடைந்து காணப்படுகிறது.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான கழிப்பறை குடிநீர் வசதிகள் இன்றி தோட்ட பராமரிப்பு, கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதியின்றி காணப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து உபகரணங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே புதர் மண்டி காணப்படும் அம்மா பூங்காவை பாதுகாக்க கரைப்புதூர் ஊராட்சி காவலர்களை நியமிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு விளையாட வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் தொகுதி மறுவரையின் படி திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுக ஊராட்சி தலைவராக ஜெயந்தி கோவிந்தராஜ் இருக்கும் போதே அம்மா பூங்கா பராமரிப்பின்றி அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அம்மாவை மறந்து விட்டார்களோ என தோன்றுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஊராட்சியின் பதவி காலம் டிசம்பர் மாதம் முடிவதற்குள் அம்மா மீது பற்றுகொண்ட ஊராட்சி தலைவர் அம்மா பூங்காவை புத்துயிர் கொடுத்து புதுப்பொழிவு பெற வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.