நாட்டில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மூ குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்து யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தனர்.
குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் பல்வேறு கட்சிகளைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்ட சென்னை வந்த யஷ்வந்த சின்ஹாவிற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன் வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாள் முதல் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். எப்போதும் நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்றது இல்லை. இப்போது நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் முக்கியமானது.
மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்த இந்த நேரத்தில் நாம் இங்குப் பேசிக் கொண்டு இருக்கிறோம். நல்வாய்ப்பாக தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி உள்ளது. மத்திய அரசு என்ன முயன்றாலும் இங்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவர்கள் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
நான் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் இதுப்போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தேவையான அழுத்தம் கொடுப்பேன். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் சிக்கலில் உள்ளது. மாநில அரசுகளுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டப்படி இருக்க வேண்டும், ஆளுநரின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதனையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அவர் ஆதரவு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்திற்கு வந்த திரௌபதி முர்மு, அதிமுகவிடம் ஆதரவு கோரினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்களிடம் ஆதரவை கோரினார் திரௌபதி முர்மு. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் 7 நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளனர்.
இதற்கான கூட்டம் சென்னை நுங்கம்பாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்துகொண்டனர். எப்படியும் இருவரும் தனித்தனியாகவே சந்திக்கப் போகிறார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், யார் முதலில் மேடை ஏறினார்கள் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இவர்தான் முதல்முறையாக மேடையில் ஏறி, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தார். பழனிசாமி உடன் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தம்பிதுரை, தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் சென்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தவிர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி பேசி முடித்து அங்கிருந்த கிளம்பிய பின்னர்தான் ஓ.பன்னீர்செல்வம் மேடையேற்றப்பட்டார். மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கட்சி சட்ட விதிகளின்படி இன்றுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்றறோடு திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவுக்கரம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள பழனிசாமி முதலாவதாக மேடையற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
யாதும் ஊரே…யாவரும் கேளின் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை குறித்து தன்னுடைய உரையை தொடங்கினார் திரௌபதி முர்மு. மேலும், “இந்தியாவில் பரவலாக உள்ள சந்தாலி வகை பழங்குடியினத்தைச் சேர்ந்தவள் நான். ஆன்மீகத்துக்கும் பெயர்போன மாநிலம் தமிழ்நாடு. பழம்பெருமை மிக்க, வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர்’ என்றார்.
– நமது நிருபர்