தமிழகம்

யானைகளின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்தல்…

திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருவது வழக்கம். இந்த யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள மலைவாழ் மக்கள் கருதுகின்றனர். இதனால் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் யானைகளை அவர்களே வனப்பகுதிக்குள் விரட்டும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன் யானைக்கூட்டம் ஒன்று அப்பகுதிக்குள் வந்துள்ளது.

யானைகளை பார்த்ததும் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து கற்கள் மற்றும் கம்புகளால் அவற்றை தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஆபத்தை சிறிதும் உணராமல் யானைகளின் வாலை பிடித்து இழுத்து அதனை துன்புறுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் கற்களை வீசி தாக்கும்போது வலி தாங்காமல் குட்டி யானைகள் பிளிறவே, அதனை கண்டு கோபமடைந்த தாய் யானை இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்துவதும், யானையிடம் சிக்காமல் இருக்க இளைஞர்களும் சிறுவர்களும் ஓட்டம் பிடித்து மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். யானைகளை துன்புறுத்தியவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்திவருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் வெளியான காட்சிகளை கொண்டு வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், உடுமலை வனச்சரக ரேஞ்சர் தனபால் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர் இளைஞர்களை தேடிவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button