ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை, பின்னணி என்ன ? வெளியான திடுக்கிடும் தகவல் !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர் வழக்கறிஞராகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல், இவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் காட்டு தீ போல் பரவியது. அதனால் அந்தப் பகுதியில் ஏராளமானவர்கள் குவியத் தொடங்கினர். அதன்பிறகு உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக பலரும் பலவிதமாக பேசி வரும் நிலையில், காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது… கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று முறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அது தொடர்பாக அவரை எச்சரிக்கையாக இருக்கும்படி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ரங்கை ஒரு கும்பல் கண்காணித்து வந்திருக்கிறது. அந்த கும்பல் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை பொருத்தவரை கட்சிப் பணியில் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்தார். அதோடு சில விவகாரங்களிலும் தலையிட்டு வந்தார். அதனால் எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கும்பல் இருக்கும். அந்த கும்பலில் உள்ளவர்களும் பாதுகாப்புடன் தான் இருப்பார்கள். அதையெல்லாம் தெரிந்த ஒரு கும்பல் தான் ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து இந்த கொலையை செய்திருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். அதன் பிறகு தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.
இந்நிலையில் அண்ணா நகர் துணை ஆணையர் முன்னிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் சரணடைவதாக கூறியுள்ளனர். அவர்கள் எட்டு பேரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.