தமிழகம்

தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்த ‘ஆணி பிடுங்கும் திருவிழா’

சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்கள் குழுவினர் திருவிழா நடத்தினர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விதமாக மனிதன் எண்ணற்ற தவறுகளை செய்து வருகிறான். அதில் ஒன்று தன் சுயலாபத்திற்காக நிழல் தரும் மரங்கள் மீது ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகளை மாட்டுவது. மரத்தில் ஆணி அடித்தால் மரத்திற்கு வேரிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் தடைபடுவதோடு மரத்தின் தோற்றம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைகின்றது.

எனவே இதனை தடுக்க இளைஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுப்பதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த இளைஞர் குழு ஆணி பிடுங்கும் திருவிழாவை நடத்தியுள்ளது.

ஒரே நாளில் மட்டும் தேனி நகர் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை இவர்கள் பிடுங்கியுள்ளனர். ஆணிகளை எடுத்த பின்பு மஞ்சள், வேப்ப எண்ணெய்யை கலந்து ஆணி எடுத்த இடத்தில் வைத்து விடுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் அந்த மரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் விரைவில் சரியாகிவிடும் என அவர்கள் கூறுகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களை ஒன்றிணைத்து இப்பணியினை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இளைஞர் குழு மேற்கொள்கிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள மரங்களில் ஆணிகளே இல்லாத நிலையை விரைவில் உருவாக்குவதே இலக்காக வைத்துள்ள இவர்கள், இதற்கு முன்னதாக பனை நடவு – 2019 என்ற இயக்கத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் 18 நீர்நிலைகளில் 40ஆயிரம் பனை விதைகளை நட்டு உள்ளனர்.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலர் பணியில் இருந்து கொண்டே தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மரங்களில் ஏறி ஆணிகளை அகற்றிவருகிறார் காவலர் சுபாஷ் சீனிவாசன்.

தனது சொந்த காரில் ஓர் ஏணி, சுத்தியல் மற்றும் ஆணி பிடுங்கும் கருவிகளுடன் தனி ஆளாக புறப்படுகிறார்.
இராமநாதபுரம்,- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் உள்ள மரங்களில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டுவருகிறார். காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் தனது வேலை நேரத்திற்குப் பிறகு இந்த வேலையில் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார்.

முதலில், ஆணி மரங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று எந்த தகவலையும் அவர் அறிந்திருக்கவில்லை, ஆனால் மரங்கள் ஆணிகளால், அடிபட்டு உதவிக்காக தன்னை அழைப்பதாக உணர்ந்து மரங்களை ஆணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்து இந்த பணியினை துவங்கியதாக அவர் கூறுகிறார். அலட்சியப் பார்வைகளைப் பொருட்படுத்தாமல், இதுவரை மரங்களில் இருந்து தாம் அகற்றிய ஆணிகளின் எடை 20 கிலோ என்கிறார் சுபாஷ் சீனிவாசன்.

மக்கள் இப்போது அவரைப் பாராட்டத் தொடங்கியுள்ளனர். சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சுபாஷ் சீனிவாசனை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கி இவரை பாராட்டியிருக்கிறார். இது குறித்து பேசிய சுபாஷ் சீனிவாசன், “கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு மனிதர்கள் உயிர்வாழ மரங்கள் ஆக்ஸிஜன் தருகின்றன. ஆனால், மனிதர்கள் வியாபார நோக்கில் விளம்பரப் பலகைகளுக்காக மரங்களில் கண்மூடித் தனமாக ஆணிகளை அடிக்கின்றனர்.”

“தமிழக அரசு மரங்களை இப்படி காயப்படுத்துபவர்கள் மீது வழக்குபதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மரங்களை பாதுகாக்க முடியும். மரம் நட எனக்கு இடமில்லை. ஆனால் காயமடைந்த நூற்றுக்கணக்கான மரங்களை என்னால் காப்பாற்ற முடியும்,” என்கிறார்.

இது குறித்து ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி சதீஸ் கூறுகையில், “நன்கு வளர்ந்த ஒரு மரம் வருடத்திற்கு 260 பவுண்ட் ஆக்சிஜனை வளி மண்டலத்திற்குத் தருகிறது.
இந்த அளவு ஆக்சிஜன் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்குப் போதுமானது. அவ்வாறு பயன் தரக்கூடிய மரங்களை காயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மரங்களில் ஆணி அடிப்பதால் அவற்றுக்கு தொற்று ஏற்பட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பின்னர் அவை பட்டுவிடும்.

எனவே சாலைகள் ஓரம் உள்ள மரங்களில் யாரும் ஆணி அடிக்கக் கூடாது என வனத்துறை சார்பில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்“ என தெரிவித்தார்.

  • ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button