தமிழகம்

பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலும் பின்னணியும்

தன்னைக் கடத்தியதாக நடிகர் பவர் ஸ்டார்’ சீனிவாசன், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஃபைனான்சியர் ஆலம் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்யாமல் விடுவித்துள்ளனர். இதனால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர்பவர் ஸ்டார்’ சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். ஊட்டி போலீஸார் உதவியுடன் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை சென்னை போலீஸார் மீட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த ஃபைனான்சியர் ஆலம் உட்பட 5 பேரை போலீஸார் சென்னைக்கு அழைத்துவந்து விசாரித்தனர். ஆலம் உட்பட 5 பேரிடம் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் விசாரித்தபோது, பவர் ஸ்டார் சீனிவாசனையும் அவருடைய மனைவி ஜூலியையும் நாங்கள் கடத்தவில்லை. அவராகத்தான் ஊட்டிக்கு வந்தார். எங்கள் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார்’ என்று கூறியுள்ளனர். அதைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆலம் உட்பட 5 பேர், விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்படவில்லை. இதனால்பவர் ஸ்டார்’ கொடுத்த கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பி.ஆர்.ஓ. பிரித்தி மற்றும் சிலரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “என்னை (பவர்ஸ்டார் சீனிவாசன்) கோயம்பேடு பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்கு பிரித்தி என்பவர் போனில் அழைத்தார். ஹோட்டல் அறையில் தன்னை, சிலர் சித்ரவதை செய்தனர். பிறகு காரில் ஊட்டிக்கு கடத்தினர்’ என புகாரில் பவர் ஸ்டார் குறிப்பிட்டிருந்தார். அதோடு ஊட்டியில் தன்னுடைய மனைவி ஜூலியை ஆதம் தரப்பினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களைக் கடத்தியது ஃபைனான்சியர் ஆலம் என்று கண்ணீர்மல்க தெரிவித்தார். இதனால் உதகை போலீஸார் உதவியுடன் ஜூலியை நாங்கள் மீட்டு, ஆலம் உட்பட 5 பேரிடம் விசாரித்தோம். விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததால் ஆலம் உட்பட 5 பேரை கைது செய்யவில்லை.
கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், ஆலம் உட்பட 5 பேரின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. பவர் ஸ்டாரின் மனைவி ஜூலி ஊட்டி செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது யார் என்று விசாரித்துவருகிறோம். மேலும், இந்தச் சம்பவத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், அவரின் மனைவி ஜூலியிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள பி.ஆர்.ஓ. பிரித்தி உட்பட சிலரிடம் விசாரித்தபிறகுதான் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்” என்றனர்.
பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கும் பெங்களூரு ஃபைனான்சியர் ஆலத்துக்கும் பணத்தகராறு இருந்துவந்துள்ளது. அதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் ஊட்டியில் ஜூலியின் பெயரில் உள்ள வீட்டை ஆலம் தரப்பினருக்கு எழுதி கொடுக்கபவர் ஸ்டார்’ சம்மதித்துள்ளார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால்தான் கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஃபைனான்சியர் ஆலம் தரப்பினரோ பவர் ஸ்டார் சீனிவாசனையும் அவரின் மனைவி ஜூலியையும் நாங்கள் கடத்தியிலிருந்தால் எப்படி பவர் ஸ்டார் சீனிவாசனை மட்டும் எப்படி விடுவிப்போம் என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். ஆனால், பவர் ஸ்டார் சீனிவாசன், கடத்தல் கும்பலிடம் பேசி தப்பித்து வந்ததாக தெரிவித்துள்ளார். முரண்பட்ட தகவல்களால் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அவரின் மனைவி ஜூலி கடத்தல் புகாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பேசினோம். “நான் ஃபைனான்சியர் ஆலத்திடம் பணம் வாங்கியது உண்மைதான். அவர்கள் கடத்தாமல் நானும் என் மனைவியும் ஏன் ஊட்டிக்குச் செல்ல வேண்டும். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஊட்டி வீட்டை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு கேட்டார்கள். அங்கு நடந்த பல சம்பவங்களைச் சொல்ல முடியாதநிலையில் இருக்கிறேன். தை மாதம் அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுவேன். ஆலத்திடம் பணம் வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி நானாக ஊட்டிக்குச் செல்வேன். என் மனைவி ஊட்டிக்கு விமானத்தில் செல்ல அவர்கள்தான் டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்கள். ஏன், நான் கோவையிலிருந்து சென்னைக்கு வர விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால், நான் காரில் சென்னைக்கு வந்துவிட்டேன். இப்போது எல்லாவற்றையும் மாற்றி பேசுகிறார்கள். நியாயம் ஒன்று இருக்கிறது. அது நிச்சயம் ஜெயிக்கும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button