சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் 65 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால், உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்றதிலிருந்து இன்றுவரை, கஞ்சா வேட்டையில் 2.0 என்ற சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு, இந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 37 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் புகையிலை, குட்கா, கஞ்சா, கள்ள மதுபானம், தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டு இவை அனைத்தும் பெரும்பாலும் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், அன்னூர், கோயில் பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இது அப்பகுதியினர் அனைவருக்கும் தெரிந்த நிலையில், காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை விசாரித்தபோது.. அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து, சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தனிப்பிரிவு ஆய்வாளர் அழகுராஜா தலைமையில் இயங்கும் காவல்துறையினர், சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து, பணத்தைப் பெற்றுக்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்காமல் மறைத்து விடுகின்றனர். இதுதான் பொள்ளாச்சி கள்ளச்சாராயம் சம்பவம் நடைபெற முக்கிய காரணம் என்கிறார்கள்.
மேலும் கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில், கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் வகையில், சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் அனைத்தும் மிகவும் எளிதான வகையில் கிடைக்கிறது. இவையனைத்தும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினருக்கும் நன்கு தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வியையும் எழுப்புகின்றனர். இதேபோல் கோவில் பாளையத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் தாபா என்கிற பெயரில் சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டு, கல்லூரி மாணவர்களையும், இளைய சமுதாயத்தினரையும் சீரழித்து வருவதற்கு யார் காரணம் ? மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் தான் என்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் தற்போது, பொள்ளாச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இரண்டு நபர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிப்பதை தடுத்திருக்கலாம் அல்லவா, இதுபோன்ற சம்பவங்களால் தான் தமிழக அரசுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. ஏன் இவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. காவல் துறையினர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து செயல்பட்டால், சட்டம் ஒழுங்கு எப்படி சீராக இருக்கும், இவர்களால் முதல்வருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தான் கெட்ட பெயர் உருவாகும். மேற்கு மண்டல ஐ.ஜி, மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ ! இதன் பிறகாவது நடவடிக்கை இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
-நமது நிருபர்