பழனி அருகே குடிநீர் குழாய் இணைப்புக்கு, பணம் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கும் பேரூராட்சி அலுவலர்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1998-1999ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் வரதமா நதி அணையிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுற்றியிலும் நீர் கசிய துவங்கியுள்ளது. பின்னர் கடந்த ஜூன் மாதம் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக நீர் தேக்கும் வகையில், சுமார் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி, தொட்டியின் உள் பூச்சு வேலைகளை முழுமையாக செய்யாமல், மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் முறையான கட்டுமான பணிகளை முடிக்காமல், தண்ணீர் தேக்கி வைப்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி தற்போது தண்ணீர் கசிய துவங்கியுள்ளது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒவ்வொரு முறையும் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீர் இணைப்புக்காக ரூபாய் 20,000/- கட்டணமாக நிர்ணயம் செய்து, முன்பணமாக ரூபாய் 10,000/- வசூல் செய்ததோடு, விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் என பெற்றுக்கொண்டு, குடிநீர் இணைப்புக்காக பெறப்பட்ட தொகை 10,100/- என ரசீது போட்டு அதை பேரூராட்சி நிர்வாகமே வைத்துக் கொண்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதன்பிறகு செண்டேஜ் கட்டணம் என 12,000/- முதல் 13,600/- வரை பழனி TMB வங்கி கிளை, ஆயக்குடி IOB வங்கி கிளையிலும் செலுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் ஒன்றரை வருடத்திற்கு மேலாகியும் ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர்.
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 75% சதவிகிதம் பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல், இழுத்தடிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குழாய் இணைப்பு வழங்கும் ஒப்பந்ததாரர்கள், ஏதோ சில காரணங்களை பொதுமக்களிடம் தெரிவித்து தட்டி கழித்து வருவதாகவும், விரைவாக பணிகளை துவங்க சில ஆயிரங்களை லஞ்சமாகவும் பணம் வாங்கியதாக தெரியவருகிறது. பணபலம், ஆள்பலம், அரசியல் பலம் உள்ளவர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், பேரூராட்சி நிர்வாகத்திடம் பணத்தை கொடுத்து விட்டு இதுவரை குடிநீர் இணைப்பு பெறாமல் தவித்து வரும் பொதுமக்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாதிக்பாட்ஷா