திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஊராட்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்னாபுரம் ஊராட்சி மன்றம் வழங்கியுள்ள அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்யக்கோரி, பொதுமக்களும், விவசாயிகள் சங்கங்களும் ஒன்று திரண்டு ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்… பொன்னாபுரம் ஊராட்சியில் கார்பன் மேக்ஸ் அட்வாண்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூன்று ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் இந்த நிறுவனம் அமைந்தால், காற்று மாசுபாடு ஏற்பட்டு இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நிலத்தடி நீர், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு நிறம் மாறி காணப்படுவதோடு, விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் பெரும்பான்மையாக வசித்துவரும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படும் என்கின்றனர்.
அளவுக்கதிகமான அளவில் திடீரென பொதுமக்கள் பொன்னாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருப்பூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், தாராபுரம் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் உள்ளிட்டோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் காத்திருப்பு போராட்டத்தை கைவிட பொதுமக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்துசெய்ய வலியுறுத்தினர். பொன்னாபுரம் ஊராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்தசெய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என பொதுமக்கள் உறுதியாக இருப்பதால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. நாளையும் போராட்டம் தொடரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அரசு அதிகாரிகளின் கடமை என்பதை உணர்ந்து, அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஏனோ ?.!
-குமார்
செய்தியாளர்