தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை… தேசிய கீதமும் இசைக்கப்பட வில்லை… : சர்ச்சையைக் கிளப்பிய மதுரை எய்ம்ஸ் விழா!
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படாதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவை பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே மாற்றியது முதலே சர்ச்சை மேல் சர்ச்சைதான். அடிக்கல் நாட்டு விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்தவுடனே பூங்கொத்து வரவேற்பு, பொன்னாடை போர்த்துவது, வரவேற்புரை என விழா நிகழ்ச்சிகள் விறுவிறுவென நடந்தன. மோடியும் 10 நிமிடம் கூட பேசவில்லை.
உரையை நன்றி, வணக்கம் என்று முடித்த மோடி அப்படியே பாஜக மேடைப் பக்கம் சென்று விட்டார். அரசு நிகழ்ச்சிகளில் விழா ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் மரபு.
அதெல்லாம் நடக்காதது ஏன்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறந்து விட்டார்களா? அல்லது நேரத்தை மிச்சப்படுத்த மோடியே தவிர்த்துவிட்டாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி தாய் நாட்டை இப்படியா அவமானப்படுத்துவது, தேசப்பற்றாளர்களின் ரத்தம் கொதிக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், “அரசு விழாக்களில் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்போது நிகழ்ச்சியின் முதல் தொடக்கத்திலேயே பாடியிருப்பார்கள். தமிழ்த்தாய்க்கோ, தமிழ்த்தாயின் வாழ்த்துக்கோ, தமிழுக்கோ எந்த வகையிலும் அவமானம் ஏற்படுவதை பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றக் கொள்ள மாட்டார். பாஜகவும் ஏற்காது. பாஜகவின் கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். பாஜகவின் கூட்டணி அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் குறைந்தது 30 தொகுதிகளை கைப்பற்றும்” என்று கூறினார்.